விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை விற்க முடியாமல் ஆண்டு தோறும் தவித்து வருகின்றனர். நெல்லை விற்க விவசாயிகளுக்கு கை கொடுப்பது நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Station) தான். அதனால் தான், நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இடைத்தரகர் (Intermediary) மூலம் விற்பனை செய்து வந்ததால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காமல் போனது. தற்போது அரசு தாராபுரம் பகுதியில் சத்திரம், தாராபுரம், தளவாய்பட்டினம், செலாம்பாளையம் பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்போது தாராபுரம் பழைய அமராவதி பாசனத்தில் 8 ஆயிரத்து 300 ஏக்கரும், புதிய அமராவதி பாசனத்தில் 9 ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி (Irrigation) பெறுகிறது. பருவமழை பெய்ததால் அமராவதி அணை நிரம்பியதை அடுத்து இரு பாசனப்பகுதியில் சாகுபடி (Cultivation) செய்யப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் பால் பிடிக்கும் பருவத்தில் மழை பெய்து நெற்பயிர் சேதம் அடைந்தது.
4 நெல் கொள்முதல் நிலையங்கள்
தற்போது இரு பாசன பகுதியில் நெல் அறுவடை (Paddy Harvest) முழுவீச்சில் நடந்து வருகிறது. தளவாய் பட்டினம், சத்திரம், செலாம்பாளையம், தாராபுரம் இறைச்சி மஸ்தான் தர்கா அருகே என 4 பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சன்ன ரக நெல்லுக்கு கிலோவிற்கு 19 ரூபாய் 50 காசும், மோட்ட ரக நெல்லிற்கு 19 ரூபாயும் விவசாயிகளின் வங்கிக்கணக்கிலேயே (Bank account) தொகை செலுத்தப்படுகிறது. விவசாய விளைநிலங்கள் அருகேயே அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த இந்த 5 சோதனைகளை செய்தே ஆக வேண்டும்!
Share your comments