அரியலுார் மாவட்டத்தில் நவரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, கோடாலிகருப்பூர், சோழமாதேவி, வாழைக்குறிச்சி, ஸ்ரீராமன் மற்றும் பிள்ளைப்பாளையம், ஓலையூர் ஆகிய 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் கைவிரல் ரேகையை பதிவு செய்த பிறகு விவசாயிகளின் விபரங்கள் தெரியவரும். இதனடிப்படையில் முன்பதிவு செய்யப்படும்.
நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.
பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் சங்கமம்- 2023 நிகழ்ச்சி ஜூலை 27,28, 29 ஆகிய நாட்களில் திருச்சி மாவட்டத்தில் நடைப்பெற உள்ளது. இதனால் வருகிற 28 ஆம் தேதி நடைப்பெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25 ஆம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள GDP hall-ல் நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் பங்கேற்குமாறும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில் நடைப்பெறும் கண்காட்சியில் வேளாண்மையை எளிமைபடுத்தும் நவீனதொழில் நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான பொருட்களை மதிப்புக்கூட்டு நுட்பங்கள், பாரம்பரியமிக்க மரபுச்சார் தொழில்நுட்பங்கள், ஏற்றம்பெற ஏற்றுமதி வாய்ப்புகள், வேளாண் விளைப்பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மேலும், மின்னனு முறையிலான விற்பனை, வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் இயந்திரங்கள், பசுமை குடில் தொழில்நுட்பங்கள். பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுச்சார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள், குறித்த விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்கள், செயல் விளக்கங்கள், கருத்தரங்குகள், வேளாண்மானிய உதவிகள் பெற முன்பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு, ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி?
Share your comments