நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் மட்டும் அதிமுகவின் மாநாட்டினை கருத்தில் கொண்டு வருகிற 23 ஆம் தேதிக்கு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்று வரும் போராட்டத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்களுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
”நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர்; இந்தி திணிப்பை எதிர்த்து கழகத்தில் பலபேர் உயிர் நீத்துள்ளார்கள். அதேபோன்று இன்று நீட் தேர்வை எதிர்த்து இளம் சிட்டுக்கள் பலர் உயிரை மாய்த்துள்ளார்கள். ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு” என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, திருமணமான கையோடு புதுமண தம்பதியினர் நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகள் ஏந்தி, நடைப்பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் திமுக ஆதரித்தது. ஆளுநரின் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”AIIMS மருத்துவக் கல்லூரியில் படித்த 56% மருத்துவர்கள் இந்தியாவிலேயே இல்லை; வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், இதுதான் உங்கள் மாடல். இந்தியாவிலேயே முதல்முறையாக நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்தான். பல்வேறு தேர்வுகளுக்கு பதிலாக ஒரே தேர்வை எழுதி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது” என நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. எழிலன் பேசினார்.
“திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தோம். அதனடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், ஒன்றிய அரசும், ஆளுநரும் இதற்கு செவி கொடுக்காததால் நீட் தேர்வு தொடர்கிறது. மேலும் அழுத்தம் கொடுக்கவே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுகிறது” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மதுரை தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் நடைப்பெற்று வரும் இப்போராட்டம் மாலை 5 மணி வரை நடைப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் தவிர்த்து சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் காண்க:
முன்னறிவிப்பின்றி விவசாய நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதா?
காத்திருந்து.. காத்திருந்து.. சம்பா சாகுபடியும் விவசாயிகளும்!
Share your comments