கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்துக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சார்ந்து இருக்கின்றது.
அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்பொழுது, அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் ஏற்படுவது இயல்புதான். அந்நிலையில் தற்பொழுது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கின்றது. இதனால் தக்காளியின் விலை தற்பொழுது உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன் ரூபாய் 450 முதல் 500 ரூபாய் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு பெட்டி 900 ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறது. கடைகளில் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு சில இடங்களில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும், காய்கறிகளுக்கு அதிக டிமாண்ட் உள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்குத் தக்காளி விற்பனை செய்யும் நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தக்காளி கொள்முதல் செய்யப்படலாம்.
அதனை சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், சிந்தாமணி நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகளால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் ஆகியவை மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படும். பொது மக்கள் இதை வாங்கி பயனடையுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க
Share your comments