தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் மட்டுமின்றி கொள்கை ரீதியாகவும் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. குறிப்பாக திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்க தலைவர்கள், திராவிட கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
திமுக இளைஞரணியை கொள்கை ரீதியாக வலுப்படுத்தும் வகையில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தை “திராவிட மாதம்” என்று கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்ப அணி முடிவு செய்துள்ளது. இதற்காக தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேசஸில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியும் உள்ளனர் மேலும் பலர் உரையாற்ற உள்ளனர்.
இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் இணைந்து தலைவர்களின் உரைகளை கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகள், ஒவ்வொரு தலைவர்கள் என்ற வகையில் 29 நாட்கள் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. முதல் நாளில் திராவிட மாடல் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயரஞ்சன், இரண்டாவது நாளில் உலகெங்கும் திராவிடம் என்ற தலைப்பில் மு.மு.அப்துல்லா எம்.பி,
மூன்றாவது நாளில் திராவிட பொருளாதாரம் என்ற தலைப்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நான்காவது நாளில் திராவிடத்தால் கற்றோம் என்ற தலைப்பில் அமைச்சர் க.பொன்முடி, ஐந்தாவது நாளில் திராவிட மேடை என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உரையாற்றினர் என்பது குறிப்பிடதக்கது. இதையடுத்து தொல்.திருமாவளவன் (திராவிட வெளிச்சம்), ஆர்.எஸ்.பாரதி (திராவிட தியாகம்),
திருச்சி சிவா (திராவிட கனல்), பீட்டர் அல்போன்ஸ் (திராவிட இந்தியா), சுப.வீரபாண்டியன் (திராவிட இதழியல்), தமிழச்சி தங்கபாண்டியன் (திராவிட PEN), அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திராவிடப் பள்ளி), அமைச்சர் கே.என்.நேரு (திராவிட தொண்டன்), அமைச்சர் மா.சுப்பிரமணியன் (திராவிடக் களம்), கனிமொழி (திராவிட வாழ்வியல்) உள்ளிட்டோர் உரையாற்றியுள்ளனர்.
திராவிட மாதக் கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று (செப்டம்பர் 30) இரவு 8 மணிக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றுகிறார். இவர் ”திராவிட அரசு” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றும் முதல் தமிழக முதல்வர் என்ற பெருமையை ஸ்டாலின் பெறப் போகிறார். இதில் பலரும் இணைந்து முதல்வரின் உரையை கேட்டு பயன்பெறுமாறு திமுக இளைஞரணி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
உழவர் நலத்துறை சார்பாக சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்
Share your comments