1. செய்திகள்

டெண்டரில் இனி முறைகேடு செய்ய இயலாதா? தமிழக அரசு போட்ட பலே ஸ்கெட்ச்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
E-procurement will be made mandatory from April 1 says TN govt

2022-23-ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில், 1-04-2023 முதல் அனைத்து அரசு மற்றும் அரசுப் பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் "மின்னணு கொள்முதல்முறை" (e-procurement) கட்டாயமாக்கப்படும் என்றும் இதற்காக ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டவிதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வழியாக மின்னணு முறையில் கொள்முதல் செய்யும் முறையினை அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்படுத்த, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் விதிகள் 2000-இல், விதி 4-A என்ற புதிய விதியினை அரசு சேர்த்துள்ளது. இதன்படி, புதிய ஒப்பந்தப் புள்ளி நடவடிக்கைகள் இனி https://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மேற்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த மின்னணு இணையதளமானது, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், விதிகளுக்கு இணங்க முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களால் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்தல், ஒப்பந்தப் புள்ளிகள் திறத்தல், தேர்வுபெற்றவர்களுக்கு ஆணைக்கடிதம் (Letter of Award) வழங்குதல் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் இந்த இணையதளம் வழியாக கடவுச் சொல்மூலம் (Password) அங்கீகரிக்கப்பட்டு, மின்னணு முறையில் (டிஜிட்டல்) கையொப்பத்துடன் செய்யப்படும். அனைத்துத் தரவுகளும் குறியாக்கம் (Encrypted) செய்யப்படுவதால் அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே ஒப்பந்தப் புள்ளிவிவரங்களை அறியமுடியும்.மேலும் இணையதளத்தின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒப்பந்தப்புள்ளி பரிவர்த்தனையையும், நாள், நேரமுத்திரையுடன் உருவாக்கி, அறிக்கையாகப் பதிவு செய்யப்படும்.

பிணைய வைப்புத் தொகையினை (EMD) வங்கி உத்திரவாதமாகவோ, இணையதளப் பணப் பரிவர்தனை மூலமாகவோ ஒப்பந்ததாரரின் விருப்பத்திற்கிணங்க செலுத்தலாம். ஒப்பந்தப் புள்ளி திறப்பு இணையம் (Online) மூலமாக ஒரேநேரத்தில் செய்யப்படும். இதனைப் பங்கேற்கும் அனைத்து ஒப்பந்ததாரும் பார்வையிடலாம்.

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டப்பிரிவு 16-60 குறிப்பிடப்பட்டுள்ள கொள்முதல் வகைகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக பின்பற்றப்படும் நடைமுறைகளின் படி செய்யப்படுகின்ற கொள்முதல்கள் மற்றும் 01-04-2023 ஆம் தேதிக்கு முன்னர் இணையதளம் அல்லாமல் சாதாரண முறையில் (offline) வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளும், அவ்வாறு வெளியிடப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ள கொள்முதல்கள் தவிர்த்து அனைத்துக் கொள்முதல்களும் இந்த புதிய இணையதளம் வாயிலாக மட்டுமே செயல்படுத்தப்படும்.

மேற்கூறியவை தவிர, 1.4.2023-க்கு பிறகு, இந்த இணையதள முறையை பின்பற்றாமல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டால், அது விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்படும். இச்சீர்திருத்தம் செய்யப்படுவதன் மூலம் வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை நடைமுறைப் படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு புதிய மைக்கல்லை எய்தியுள்ளதாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 50 லட்சம் மதிப்பிற்கு அதிகமான கட்டுமான டெண்டர்கள், 25 லட்சம் மதிப்பிற்கு அதிகமான மற்ற டெண்டர்கள் இனி E டெண்டர் முறையை பின்பற்றி தான் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அரசுக்கு சமூக நல ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் டெண்டர் முறைகேடு குறைய வாய்ப்புள்ளதாகவும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண்க:

மா விவசாயிகளை ஆட்டம் காண வைத்த ஆலங்கட்டி மழை- ICAR அதிகாரிகள் தகவல்

சிறு, குறு விவசாயிகளுக்கு டபுள் தமக்கா.. PM kisan நிதியுடன் ஏக்கருக்கு ரூ.5000 நிதியுதவி!

English Summary: E-procurement will be made mandatory from April 1 says TN govt Published on: 02 April 2023, 04:55 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.