மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்திற்கு அறிவுறுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்சமயம் தமிழக மின்வாரியம், கடனில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக மின் வாரியம் கடனிலிருந்து மீளுவதற்காக, மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தல் குறித்து மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இதை தொடர்ந்து, அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்: “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இந்த மின் கட்டண உயர்வு இருக்கும். போதாததற்கு மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாவர்.
மின் வாரியத்தின் கடனை மக்கள் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்? மின் வாரியம் கடன் சுமையில் இருப்பது உண்மை என்றால், அதற்கு மக்கள் பொறுப்பல்ல. மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வது மற்றும் பராமரிப்பதில் நிர்வாகச் சீர்கேடு போன்ற பல்வேறு முறையில் நிலவும் கேடுகெட்ட ஊழல் போன்றவையே காரணமாகும். சங்கப் பிரதிநிதிகள், தனியார் மைய நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும், வாரியத்தில் நிலவும் ஊழல்களைக் களைந்து எடுப்பது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால் மின் வாரியத்தை கடனிலிருந்து மீட்கலாம்.
அதை விடுத்து, மக்கள் மீது சுமந்தப்படும் மின் கட்டணம் உயர்வு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் அறிவுறுத்தலை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். அதாவது, மின் மசோதா 2021யை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசையும், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என மாநில அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பொதுமக்களும் எங்கள் சங்கத்துடன் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று வேண்டுகிறோம்” என்று இந்திய நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments