நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது 75-ஆவது சுதந்திர தின உரையில் மக்களிடையே காணப்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு சார்பில் பொது விநியோக திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் (NFSA) பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) மற்றும் அந்தியோதிய அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்:
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தின் அடிப்படை நோக்கமானது இரத்த சோகை மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை போக்க, இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் தயாரிக்கப்பட்டு, அவை சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம் மற்றும் அதே சமையல் முறையைக் கொண்டது. மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி அதிக சத்துக்கள் கொண்டது.
செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள்:
- இரும்புச்சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது இரத்த சோகையினை தடுக்கிறது.
- செறிவூட்டப்பட்ட அரிசியில் போலிக் அமிலம் இருப்பதால் அவை கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.
- வைட்டமின் பி12 -வினை உள்ளடக்கிய அரிசியானது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் (NFSA) பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) மற்றும் அந்தியோதிய அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்கள் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை அங்காடிகள் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை 01.04.2023 முதல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி இஆப., தனது செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் ஏற்கெனவே திருச்சி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
Share your comments