கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார். அப்போது, நடப்பு குறுவை பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில் 4600 ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறுவை நெல் சாகுபடி
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செம்மை நெல் சாகுபடி குறித்த செயல் விளக்கங்களும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் குறுவை நெல் சாகுபடி நடவுப் பணிகள் தொடங்கியுள்ளது. கோபியை அடுத்த மேவானி கிராமத்தில் நெல் இயந்திர நடவுப் பணியினை வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தொடங்கி வைத்தார்.
செம்மை நெல் சாகுபடி முறை
அப்போது அவர் பேசுகையில், செம்மை நெல் சாகுபடி முறையில் (ஒற்றை நாற்று நடவு முறை) நெல் நடவு செய்வதன் மூலம் குறைந்த அளவு விதை நெல் போதுமானது. நடவு ஆட்கள் தேவை குறையும். மேலும், இளவயது நாற்றுகளை சரியான இடைவெளியில் நடுவதால், பயிர்களுக்கு இடையே காற்றோட்டம் மற்றும் பராமரிப்பு அதிகரித்து, அதிக தூர் கட்டுதல் மற்றும் அதிக மணிகள் பிடித்து மகசூல் அதிகரிக்கும்.
பூச்சி & நோய் கட்டுப்பாடு முறை
மேலும் மொத்த நெல் சாகுபடி பரப்பில் 80 சதவீதம் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடி முறையை அறிமுகப்படுத்த விவசாயிகளிடம் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வரப்புகளில் உளுந்து மற்றும் தட்டைப்பயறு போன்ற பயறுவகைகளை, பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைக்கு உதவுகிறது.
மானிய விலை விதை நெல்
குறுவை பருவத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் பரிந்துரைத்துள்ள ஏ.எஸ்.டி. - 16, டி.பி.எஸ் - 5, ஏ.டி.டி.-45 போன்ற குறுகிய கால வயதுடைய ரகங்கள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 55 மெட்ரிக் டன் அளவு விதை நெல் மானிய விலையில் உழவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு குறுவை பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில், 4600 ஹெக்டரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படவுள்ளது என்று கூறினார்.
மேலும் படிக்க...
கார்ப் பருவ சாகுபடிக்கு கடனுதவி வேண்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்!
பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
ராணிப்பேட்டையில் சிறு குறு விவசாயப் பயன்பாட்டுக்கு வாடகையின்றி டிராக்டர்!
Share your comments