ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்கு செலுத்தியதிற்கு அடையாளமாக வைக்கப்படும் மை எளிதில் அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அதனை மறுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களை தவிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் (கரும்பு விவசாயி சின்னத்திலும்), தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் எஸ்.ஆனந்த் (முரசு சின்னம்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பரப்புரை தொடங்கிய நாளிலிருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லை. திராவிட கட்சிகள் இரண்டும், வாக்குக்கு பணம் தருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று வாக்குப்பதிவின் போதும் பல வித குற்றச்சாட்டுகள் இருதரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றனர்.
வாக்கு செலுத்தியதற்கு அடையாளமாக விரல்களில் மை வைக்கப்படுவது தேர்தல் நடைமுறைகளில் ஒன்று. இந்நிலையில் விரலில் வைக்கப்படும் மையின் தரம் மிக மோசமாக உள்ளது. விரைவில் அழிந்துவிடும் வகையில் உள்ளது, இதனால் போலி வாக்குப்பதிவு செலுத்த வாய்புள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ இன்பத்துரை புகார் அளித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வாக்கு பதிவு சுமூகமாக நடைப்பெற்று வருகிறது. மை தொடர்பான புகார் குறித்து விசாரித்தோம், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்களித்த பின் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது எதிர் அணியினர் இதுவரை சந்திக்காத தோல்வியை அடைவார்கள். வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சியினர் வெற்றி பெற முடியாது என்கிற காரணத்தால் தேவையில்லாத குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றனர். என் கையில் மை வைத்து 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் மை அப்படியே தான் இருக்கிறது என பேட்டி அளித்தார்.
சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான களத்தில் போட்டியிடுகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை
அப்படி போடு..புவிசார் குறியீடு பெற்ற இலவம்பாடி கத்தரி,ராம்நாடு முண்டு மிளாகாய்
Share your comments