வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு 2023-24ம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் "யுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்'' என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல் II பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலுார், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 பிர்காக்களிலும், பருத்தி II பயிருக்கு அரியலுார், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம்
மற்றும் சுத்தமல்லி ஆகிய 7 பிர்காக்களிலும், மக்காச்சோளம் II பயிருக்கு அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர், திருமானூர், R.S மாத்தூர் மற்றும் செந்துறை ஆகிய 7 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின்கீழ் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், உடையார்பாளையம், பொன்பரப்பி, R.S மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய 9 பிர்காக்களிலும், நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலுார், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, R.S மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய 12 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு 2023-24ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் II மற்றும் மக்காச்சோளம் II பயிருக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும் மற்றும் பருத்தி II பயிருக்கு அக்டோபர் 31ம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெல் II பயிருக்கு ரூ.567-ம், 1 ஏக்கர் மக்காச்சோளம் II பயிருக்கு ரூ.341.25-ம் மற்றும் 1 ஏக்கர் பருத்தி II பயிருக்கு ரூ.578.03-ம் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து
கொள்ளலாம். மேலும் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு நவம்பர் 30ம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு 2024 ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் உளுந்து பயிருக்கு ரூ.210-ம், 1 ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு ரூ.349.5-ம் பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம்.
இது தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Share your comments