இரமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான விதை விற்பனை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரினையும், பருவ மழையையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சம்பா அல்லது இரண்டாம் பயிர் பருவத்தில் அனைத்து விவசாயிகளும் சாகுபடி பணிகளில் ஈடுபடுவார்கள். வழக்கமாக, பருவமழை வருகையின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் சீசன் தொடங்கி ஜனவரியில் முடிவடையும். ஆனால் தற்போது வரை பருவமழை எதிர்ப்பார்த்த அளவிற்கு தொடங்காததால் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்பா நெல் சாகுபடி பரப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மழையினை நம்பியும், எஞ்சிய பகுதிகள் வைகை ஆற்று நீரின் உதவியுடனும் பாசன வசதி பெறுகின்றன. இழப்பீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே சாகுபடி பரப்பளவு 1.3 லட்சம் ஹெக்டேருக்கு மேல் இருக்கும் என்று வேளாண் துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இந்நேரம் தொடங்கியிருக்க வேண்டிய சாகுபடி பணிகள் பாசன நீர் பிரச்சினையால் கால தாமதம் ஆகியுள்ளது. பருவமழை இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு தொடங்காத நிலையில் பெரியாறு அணையின் நீர் மட்டமும் சுமார் 120 அடியாக உள்ளதால் வைகையில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடந்த ஆண்டுகளை விட அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. முதல்போக சாகுபடிக்கு கூட தண்ணீர் திறக்கப்படவில்லை என்ற நிலையில் மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் மட்டுமே, பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இன்னும் ஒரிரு வாரங்களில் பருவமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சாகுபடியினை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு பெரும்பாலான நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படுவதால், மானாவாரி விவசாயிகள் மழை பெய்தவுடன் சாகுபடி பணிகளை தொடங்க வாய்ப்புள்ளது,” என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வைகை பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பாக்கியநாதன் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில் வைகை ஆற்றுப்படுகை மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றி, வால் முனை பகுதிகளுக்கு விரைவாக தண்ணீர் கொண்டு வந்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளும் பொருட்டு, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகவிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரின் வரத்து கடந்த 4 நாட்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 13,159 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 54.70 அடியாக தொடர்கிறது.
மேலும் காண்க:
முன்னறிவிப்பின்றி விவசாய நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதா?
விண்ணப்பிக்க கடைசி 3 நாள்- அஞ்சல் துறையில் 30041 காலிப்பணியிடம்
Share your comments