மாட்டுத் தீவனங்கள் படிப்படியாக விலையேற்றம் கண்டுள்ளதால், அதனை பால் கொள்முதல் நிலையங்கள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயம் சார்ந்த தொழிலாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் பயிர் சாகுபடியுடன் சேர்ந்து கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதனால் விவசாயத்தில் போதுமான வருமானம் கிடைக்காத பட்சத்தில், கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் சற்று ஆறுதலை கொடுத்து வருகிறது. பால் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் மாடுகளுக்கு, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தோடு, இணை உணவுகளும் வழங்குவது அவசியமாகும்.
அதிகரித்து வரும் தீவனப் பொருள் விலை
அவ்வகையில், புரதச்சத்துக்காக, கால்நடை கலப்பு தீவனம், மக்காச்சோள மாவு மற்றும் புண்ணாக்கு வழங்கப்படுகிறது. இவையனைத்தும், சரிவிகித அளவில் அளித்தால் மட்டுமே பால் உற்பத்தி சீராக இருக்கும்.இந்நிலையில், ஆவின் மூலம், கிராமங்களில் வழங்கப்படும் மாட்டுத் தீவனம், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 850 - 900 ரூபாயாக உள்ளது. இதில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் 'பில்' ரசீது தருவதில்லை. மேலும் மானியம் இல்லாமல், வெளிச்சந்தைகளில் வாங்கப்படும் கலப்பு தீவனத்தின் விலையும் அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்
இது தொடர்பாக கால்நடை விவசாயிகள் தெரிவிக்கையில், கோடை காலத்தில், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாகும். நடப்பாண்டில், பல்வேறு காரணங்களால், பிற தீவனங்களின் விலையும், உயர்ந்துள்ளது; தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.எனவே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, மானிய விலையில் தீவனங்களை வழங்கி அவற்றிற்கு உரிய ரசீதுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த இந்த 5 சோதனைகளை செய்தே ஆக வேண்டும்!
Share your comments