
நெல் கொள்முதல் மையங்களில் சுமைப்பணியாளர்களுக்கான கூலி உட்பட நிர்வாகச் செலவை அரசே ஏற்று நடத்தினால் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.45 முதல் ரூ.100 வரை வசூலிக்கும் நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என பாரதிய கிசான் சங்க விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க மாநிலத்தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: தமிழகத்தின் பிரதான பயிரான நெல் தானியத்தை நுகர்பொருள் வாணிபகழகம் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளின் நெல்லை எடையிடும் போது எந்த கட்டணமும் தர வேண்டியதில்லை என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாதந்தோறும் கலெக்டர்கள் மூலம் நடத்தப்படும் அந்தந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கமிஷன் தரவேண்டாம் என தெரிவித்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனுக்குடன் வழங்காததோடு நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் நடத்துவதில் நுகர்பொருள் வாணிப கழகம் சுணக்கம் காட்டுகிறது.
நிர்வாகமின்மையே காரணம்
அறுவடை துவங்கும் போது நெல் கொள்முதல் மையங்களில் தகுதியான ஊழியர்களை பணியமர்த்துவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. கொள்முதல் நிலையங்களுக்கான இடத்தை சரியானதாக தேர்வு செய்வதில்லை. உபகரணங்கள், சாக்குகள் போதுமான அளவில் இருப்பு வைப்பதில்லை. எடை போடும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை.
மையம் நடத்துவதற்கான நிர்வாகச் செலவுகளை அரசு வழங்காத காரணத்தால் விவசாயிகளிடம் இருந்து 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.100 வரை மாவட்டம், கிராமத்திற்கு ஏற்றாற் போல் வசூலிக்கின்றனர். இதனால் ரூ. பல லட்சங்கள் புழங்கும் இடமாக நெல் கொள்முதல் மையம் மாறி வருகிறது.
எடையும் குறைப்பு
சில இடங்களில் 40 கிலோவை எடையிடுவதற்கு பதிலாக கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கிலோ நெல்லை மைய ஊழியர்கள் சேர்த்து அளப்பதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். கமிஷன் கொடுத்த பின்னும் நெல் அளவையில் கை வைப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிப்பம் ஒன்றுக்கு அரசு தரும் ரூ.10, மைய அதிகாரி சொல்லும் நபர் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.
புதிய கூலித்தொகையை நிர்ணயம் செய்து அவர்களை கையாளும் கான்ட்ராக்டர்களுக்கு தொகையை வழங்கினால் மைய ஊழியர்களின் தலையீடு குறையும். அனைத்து மாவட்ட கொள்முதல் மையங்களிலும் பணப்பரிமாற்றம் இல்லாத, எடையில் முறைகேடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Read more:
Share your comments