தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா சந்திப்பில் ‘ஃபாஸ்டேக்’( FASTag) மூலம் டிஜிட்டல் முறையில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை தமிழக வனத்துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் வெப்பநிலைத் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்னும் கோடை விடுமுறையினை மகிழ்வாய் கழிக்க தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 2636 மீ உயரம் கொண்ட புகழ்பெற்ற மிக உயர்ந்த மலைச்சிகரமான தொட்டாபெட்டாவில் குவியும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக நுழைவுக்கட்டணம் வசூலிக்க பாஸ்ட் டேக் ( FASTag) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு நாள் சோதனை முயற்சி வெற்றியடைந்ததையடுத்து, நீலகிரி வனப் பிரிவு DFO எஸ்.கௌதம் முன்னிலையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ( FASTag) வசதியை நேற்றுத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நுழைவுக் கட்டண வசூலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்து சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கவும் பாஸ்ட் டேக் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆதாரங்களின்படி, கார்கள் மற்றும் ஜீப்புகளுக்கு 40 ரூபாயும், மேக்சி கார்கள் அல்லது டெம்போ டிராவலர் வாகனங்களுக்கு 70 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்துக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. இந்த சீசனில் ஒரு நாளைக்கு சுமார் 2,500 வாகனங்கள் இப்பகுதி வழியாக செல்கின்றன என்றும், அதில் முதல் 2,000 வாகனங்களுக்கு FASTag மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ள 500 வாகனங்களுக்கு பழைய நடைமுறைப்படி பணப்பரிமாற்றம் நேரடியாகவோ அல்லது Gpay மற்றும் UPI போன்றவை மூலம் வசூலிக்கப்படுகின்றன.
DFO கௌதம் தெரிவிக்கையில், டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் முறையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், கட்டண வசூலிப்பு செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த ஐசிஐசிஐ வங்கியின் உதவியுடன் FASTag முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார். அதே சமயத்தில் முந்தைய வசூல் முறையானது வெளிப்படையாக இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
“தொட்டபெட்டாவில் இந்த புதிய முறையை நாங்கள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் பைக்காரா மற்றும் அவலாஞ்சி போன்ற பிற சுற்றுலாத் தலங்களிலும் இதே போன்ற முயற்சி அறிமுகப்படுத்தப்படும், அங்கு நுழைவுக் கட்டணம் வனத்துறையால் வசூலிக்கப்படும். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன,'' எனவும் தெரிவித்துள்ளார்.
pic courtesy: https://twitter.com/supriyasahuias
மேலும் காண்க:
Share your comments