தந்தை என்னும் உறவு, வேறு எந்த உறவாலும் ஈடு செய்ய இயலாத பந்தம். கடவுள் கொடுத்த வரம். அப்படியொரு தந்தைக்கு, தான் வளர்த்த மகளை, பிணமாக சுமார் 10 கி.மீ. தூரம் தோளில் சுமந்து செல்லும் கொடுமை நிகழ்ந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறந்த மகளின் உடலை, துாரத்தில் உள்ள தன் கிராமத்திற்கு தந்தை தோளில் சுமந்து சென்ற 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின், சுர்குஜா மாவட்டத்தின் ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் தாசின் மகள் சுரேகா. 7வயதான அந்த சிறுமி, உடல் நலக்குறைபு காரணமாக, கான்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சுரேகா மரணம் அடைந்தார். இதனை அறிந்து பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டபோது, அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. உடலை எடுத்து செல்லும் வாகனம் அங்கு இல்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்த தம்பதியிடம் பணமும் இல்லை.
ஆனால் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட அந்த தந்தை, சற்றும் தளராமல், 10 கி.மீ., தொலைவில் உள்ள தன் கிராமத்திற்கு, மகளின் உடலை தோளில் சுமந்தபடி, ஈஸ்வர் தாஸ் நடந்து சென்றுள்ளார்.
தோளிலும், மார்பிலும் தூக்கி, ஆசை ஆசையாக வளர்த்த மகளைப், பிணமாக, அதே தோளில் சுமந்து வந்தபோது, அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை, அனைவராலும் உணர முடிகிறது.
இந்தியா எவ்வளவுதான் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், இறந்த உடலைக்கூடக் கொண்டு செல்ல வாகனம் இல்லாத அவலம் நேர்வது, நாட்டிற்கே ஏற்பட்ட அவமானம். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments