Fish lovers, feeling bad for you! - Fishing ban came into effect
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகளில் மீன்பிடிக்க இரண்டு மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
இந்த காலம் தான் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் அதற்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல ஆண்டு காலமாக இதுபோன்ற தடை அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள கடல் பகுதியில் இன்று முதல் ஜூன் 14-ந் தேதி வரை விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தடைக் காலத்தை ஒட்டி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 15 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள்.
விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்வரத்து படிப்படியாக குறையும். ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் 2 மாதத்திற்கு தமிழகத்தில் கிடைக்காது. அதே நேரத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் வழக்கம் போல் மார்க்கெட்டுகளுக்கு வரும்.
மீன் பிடி தடைக்காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே மீன்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடைகாலங்களில் மீன்பிரியர்கள் அதிகமாக பாதிக்க படுவார்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
மேலும் படிக்க
அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
கோடையில் மின்தடை ஏற்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
Share your comments