ஒன்றிய மீன்வளத்துறை சார்பில் தமிழக மீனவர்களின் நலனுக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்கிற தமிழக எம்.பிக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் என்.வி.என்.சோமு கேள்விகள் எழுப்பியிருந்தனர். இவர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பதிலளித்தது மட்டுமில்லாமல் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா, நிதி உதவி (Pradhan Mantri Matsya Sampada Yojana) உட்பட உள்கட்டமைப்பு திட்டங்கள், அடையாள அட்டை வழங்குதல் ஆகியவற்றை பற்றியும் விளக்கமாக பட்டியலிட்டார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தின் மீன்வள மேம்பாட்டுக்காக ரூ.897.55 கோடி மதிப்பிலான திட்டப் பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
2021-22 காலக்கட்டம் வரையிலான 5 ஆண்டுகளில் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஒன்றிய அரசின் பங்கான ரூ.252.74 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரூபாலா கூறினார். மேலும், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், தமிழகத்திற்கு நிதி வழங்குவதற்காக, 1,091.28 கோடி ரூபாய் மதிப்பிலான மீன்வள உள்கட்டமைப்பு திட்ட (infrastructural project proposals) முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைப் பெற மீனவர்களுக்கு உதவும் வகையில் தனித்துவமான மீனவர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விக்கு, கிட்டத்தட்ட 19.16 லட்சம் மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், 12.40 லட்சம் மீனவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிக்காக QR-குறியிடப்பட்ட PVC ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா குறிப்பிட்டார்.
இதுத்தவிர மீனவர் நலனுக்காக வகுக்கப்பட்ட பல திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். இதில் நீலப் புரட்சி ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை (Blue Revolution Integrated Development and Management of Fisheries) மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்குதல் மற்றும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PM MSY) ஆகியவை அடங்கும்.
மீனவர்களுக்கு வலைகள், சங்கிலி வசதிகள், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு சாதனங்கள், சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் வகையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கான காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது எனவும் திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.
மீனவர்களுக்கான திறன் பயிற்சி, மதிப்பு கூட்டப்பட்ட சந்தைப் பொருட்களை உருவாக்குதல் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கான சமீபத்திய கேஜெட்டுகள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் குறித்த கனிமொழி எம்பியின் மற்றொரு கேள்விக்கு, மீனவர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் பதிலளித்தார்.
மேலும் காண்க:
ஏறுன வேகத்தில் இறங்கிய தங்கத்தின் விலை- பொதுமக்கள் நிம்மதி
தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற யாரெல்லாம் தகுதி?
Share your comments