சென்னை உட்பட பல இடங்களில் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக புகார்கள் எழுவதால், மின் சாதன பழுதுகளை விரைந்து சரிசெய்ய மின் வாரியம் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி மின் கொள்முதல் இருக்கிறது. இருப்பினும் டிரான்ஸ்பார்மர் மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களில் ஏற்படும் பழுதால் மின் தடை ஏற்படுகிறது. கோடைக் காலம் துவங்கியதால் பகலில் வெயில் சுட்டெரிப்பதுடன் இரவில் புழுக்கம் காணப்படுகிறது. இதனால் வீடுகளில் 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மாலை துவங்கி நள்ளிரவு வரை நடக்கின்றன.
சாதனங்கள் பழுது (Machines Repair)
மின் தேவை வழக்கத்தை விட அதிகம் உள்ள பகுதிகளில் 'ஓவர் லோடு' ஏற்படுகிறது. இதன் காரணமாக மின் சாதனங்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் 'மும்முனை மின் இணைப்பு உள்ள நிலையிலும் ஒரு 'பேஸ்' மட்டும் தான் மின்சாரம் வருகிறது. இதனால் 'ஏசி' உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களையும் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 'திடீரென மின் தடை ஏற்படுகிறது. ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு - மூன்று முறை மின் தடை ஏற்படுகிறது' என்றனர்.
மின் ஊழியர்கள் கூறுகையில் 'தற்போது கோடைக் காலம் என்பதால் மின் சாதன பழுது குறித்து அதிக புகார்கள் வருகின்றன. 'இரவு பணிக்கு குறைந்த ஊழியர்கள் மட்டுமே உள்ளதால் பழுதை சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க இரவு பணிக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் வரை டிரான்ஸ்பார்மருக்கு ஒரு வழித்தடத்தில் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் அதில் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய அதிக நேரமாகி அதற்கு ஏற்ப அதிக நேரம் மின் தடை ஏற்பட்டது. தற்போது இரண்டு மின் வழித்தடங்களில் மின்சாரம் அனுப்பப்படுகிறது. ஒன்றில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு வழித்தடத்தில் தடையின்றி மின்சாரம் வினியோகிக்கப்படும்.
'சப்ளை சேஞ்ச்' (Supply Change)
மின் சாதனங்களில் 'ஓவர் லோடு' ஏற்படுவதை தவிர்க்க ஒரு வழித்தடத்தில் அதன் திறனை விட அதிக மின்சாரம் செல்லும்போது 'சப்ளை சேஞ்ச்' என்ற முறையில் அந்த வழித்தடம் 'ஆப்' செய்யப்பட்டு மற்றொரு வழித்தடத்தில் மின்சாரம் அனுப்பப்படுகிறது. இதனால் சில நிமிடங்கள் விநியோகம் தடைபடுவதை மின் தடை என்று கருத வேண்டாம். மின் தடை ஏற்பட்டாலும் விரைந்து சரி செய்யப்படும்.
மேலும் படிக்க
Share your comments