தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற 25 வயது ஆர்த்திகண்ணன், யேல் பல்கலைக் கழகத்தில், ஸ்கூல் ஆஃப் என்விரான்மென்டில் மாஸ்டர்ஸ் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தற்பொழுது பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசமான பிரெஞ்சு பாலினேசியாவிற்கு யுஎஸ் ஃபுல்பிரைட் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களிடமிருந்து குவிந்த 121 விண்ணப்பங்களில், இந்த மதிப்பு மிக்க விருதுக்கு கடுமையான போட்டிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.ஃபிரஞ்சு பாலினேசியாவில் கள ஆய்வுக்காக ஃபுல்பிரைட் விருதைப் பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் இவர்.
சுற்றுச்சூழல் ஆய்வு (Environmental Research)
ஆர்த்திகண்ணன், ரீஃப் சுறாக்கள் போன்ற வேட்டை விலங்குகள் (ப்ரிடேடர்ஸ்) கடல் சுற்றுச்சூழலின் கீழ்தட்டு விலங்குகளான ரேவகை மற்றும் ன்கள்மீது கொண்டுள்ள தாக்கம் பற்றியும், அந்த விலங்குகள் பிரபலமாகி வரும் 'ஷார்க்-டைவிங்' சுற்றுலா செயல்பாடுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதை பற்றியும் ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த ஆர்த்தி கண்ணன், தனது தாத்தா வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவரது தாத்தாவான புகழ்பெற்ற கணிதக் கல்வியாளர் மறைந்த திரு. பி.கே. சீனிவாசன், 1965-ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கான 'ஃபுல்பிரைட்விருது' பெற்ற கணிதவியலாளர். இவர் கணித மேதை ராமானுஜனின் முதல் வாழ்க்கை வரலாற்றாசிரியரும் ஆவார். இந்தியாவில் 14 ஆண்டுகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு, உயிரியலில் இளங்கலைப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார் ஆர்த்திகண்ணன். அவர் டெக்சாஸில் உள்ள ஆஸ்டின் கல்லூரியில் தனது வழிகாட்டியான டாக்டர். டேவிட் ஐயெல்லோவிடம் 3 வருட மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சியை முடித்தபிறகு ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
வைரஸ்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளத்தோடு PhD பொசிஷன் வழங்கப்பட்டாலும் அவர், அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்றவும், பூமியின் எஞ்சிய இயற்கை வாழ்விடங்கள் மற்றும் வளங்களை பாதுகாக்கவும் வனவிலங்கு பாதுகாப்பாளராக தேர்வுபெற உறுதியாக இருந்தார். இதற்காக அவர் யேல் சுற்றுச்சூழல் பள்ளியில் சேர்ந்து இந்திய ஓநாய்களின் பாதுகாப்பு மற்றும் அமேசான் மழைக்காடுகளின் வெப்பமண்டல சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழல் அறிவியலில் தனது பட்டதாரி படிப்பைத் தொடர்ந்தார்.
ஃபுல்பிரைட் விருது (Fulbright award)
உலகின் மிகப்பெரிய, மிகவும் மாறுபட்ட சர்வதேச கல்வி பரிமாற்ற திட்டமான ஃபுல்பிரைட் விருது என்பது அமெரிக்க மக்களுக்கும் மற்ற நாடுகளின் மக்களுக்கும் இடையே பரஸ்பர புரிதலை அதிகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1946-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, 4,00,000-க்கும் மேற்பட்ட ஃபுல்பிரைட்டர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர் தலைவர்கள், நீதிபதிகள், தூதர்கள், கேபினட் அமைச்சர்கள், CEO-க்கள், பல்கலைக் கழகத் தலைவர்கள் மற்றும் முன்னணி பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பல துறைகளில் சாதனையாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மேலும் அவர்களில் 62 நோபல்பரிசு பெற்றவர்கள், 89 புலிட்சர்பரிசு வென்றவர்கள், 76 மேக்ஆர்தர் ஃபெலோக்கள்.
இந்திய விலங்குகள் (Indian Animals)
“இந்த ஃபுல்பிரைட் அனுபவம் என்னை வனவிலங்கு மற்றும் கடல் அறிவியலில் டாக்ட்ரேட் படிப்பை நோக்கி கொண்டு செல்லும். இந்த படிப்பை வைத்து சுற்றுச்சூழல் அறிவியல் கல்வியை வருங்கால சந்ததியினருக்கு அணுகக்கூடியதாக மாற்றவும், பலவீனமான வனவிலங்குகளுக்கு 'கிளைமேட் சேன்ஜ்' உட்பட பல அச்சுறுத்தல்கள் கொள்ளும் தாக்கங்களை தணிக்க உதவும் வழிமுறைகளை உருவாக்கவும் என் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில், இந்தியாவின் அழிந்து வரும் கடல் மற்றும் நிலப்பரப்பு உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்தியாவின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்கும் உதவ நான் விரும்புகிறேன்' என்கிறார் ஆர்த்திகண்ணன்.
மேலும் படிக்க
குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!
சீமைக்கருவேல மரத்தை அகற்ற இயந்திரம் கண்டுபிடிப்பு: மதுரை மாணவி அசத்தல்!
Share your comments