நாட்டில் குப்பை இல்லாத நகரங்களை உருவாக்குவது தான், 'துாய்மை இந்தியா நகர்ப்புறம் 2.0' இயக்கத்தின் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாட்டின் பிரதமராக 2014ல் நரேந்திர மோடி பதவியேற்றார். அந்த ஆண்டு அக்., 2ல் காந்தி ஜெயந்தியன்று, துாய்மை இந்தியா (Clean India) இயக்கத்தை துவக்கி வைத்தார்.
மக்கள் இயக்கம்
குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் இந்த இயக்கத்தின் நோக்கம். இது தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்நிலையில், துாய்மை இந்தியாவின் நகர்ப்புறம் 2.0 என்ற இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். மேலும், சுகாதாரமான குடிநீர் வழங்கும் 'அம்ரூத் 2.0' என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி (PM Modi) துவக்கி வைத்தார்.
டில்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: குப்பையில்லா நகரங்களே துாய்மை இந்தியாவின் நகர்ப்புறம் 2.0 இயக்கத்தின் நோக்கம்.
இந்த இரண்டாம் கட்டத்தில் கழிவு நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவது, நகரங்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க செய்வது, நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை தேடியும், தரமான வாழ்க்கை வாழும் நோக்கிலும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் தரமான வாழ்க்கை வாழ முடியவில்லை.
கிராமங்களை விட மோசமான சுகாதார சூழ்நிலையில் அவர்கள் வாழ வேண்டியுள்ளது; இது மாற்றப்பட வேண்டும். அதனால் தான் சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நகரங்களின் மேம்பாடு மிகவும் முக்கியமானது என, அம்பேத்கர் கருதினார்.இதை கருத்தில் வைத்து தான் 2014ல் துாய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டது. இந்த இயக்கம் துவக்கப்படுவதற்கு முன், நாட்டில் 20 சதவீத குப்பை தான் கையாளப்பட்டது.
விழிப்புணர்வு
இப்போது தினமும் 70 சதவீத குப்பை கையாளப்படுகிறது; இது 100 சதவீதமாக உயர்த்தப்படும். துாய்மை இந்தியா இயக்கம், இளைஞர்கள், குழந்தைகளிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் சாக்லேட் காகிதங்களை யாரும் கீழே போடாமல் பாக்கெட்டில் வைத்து கொண்டு குப்பைத் தொட்டிகளில் போடுவர். குப்பையை வெளியில் வீசக் கூடாது என பெரியோர்களை குழந்தைகள் அறிவுறுத்துவர்.
துாய்மை இந்தியா
துாய்மை பணியில் இளைஞர்கள் முன்முயற்சியை எடுக்கின்றனர். குப்பை வாயிலாக சிலர் சம்பாதிக்கின்றனர். சிலர் விழிப்புணர்வை (Awareness) ஏற்படுத்துகின்றனர். கழிவுகளை பிரிப்பதிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.துாய்மை இந்தியா இரண்டாம் கட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள குப்பை அகற்றப்படும். டில்லியில் நீண்ட காலமாக மலை போல் குவிந்துள்ள குப்பை அகற்றப்படும்.துாய்மை பிரசாரம் என்பது ஒரு நாளில், ஒரு மாதத்தில், ஒரு ஆண்டில் முடியக் கூடியது இல்லை. வாழ்நாள் முழுதும் மட்டுமின்றி, தலைமுறை தலைமுறையாக நீடிக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார்.
மேலும் படிக்க
இன்றைய சூழலில் நம் உடல்நலம் காக்க தூதுவளை தான் தேவை!
Share your comments