தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள், அமைப்புகளுக்கு ஆதார் நகலை கொடுப்பது ஆபத்தானது, அது தவறாக பயன்படுத்தப்படலாம்' என அதார் அட்டை வழங்கும் 'UIDAI' நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, இந்த விஷயத்தில் தலையிட்ட ஒன்றிய அரசு, UIDAI நிறுவனத்தின் அறிக்கையை வாபஸ் பெற்றது.
இந்தியாவில் அனைத்து விஷயங்களுக்கும் முக்கியமான அடையாள சான்றாக ஆதார் அட்டை செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஆதார் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் ஆதாரை, நம்பகமான அடையாள மற்றும் முகவரி சான்றாக கருதுகிறது என்பது குறிப்பிடதக்கது. இதனால், செல்போன் சிம்கார்டு வாங்குவதில் தொடங்கி வங்கி கடன் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் நகல் கட்டாயமாக சமர்பிக்கப்படுகிறது.
அதே சமயம், ஆதாரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 'அனைத்து மக்களின் கை, விரல் கண் ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை பெற்று வழங்கப்படும்' ஆதார் அட்டை பாதுகாப்பானதே என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஆதாரை எந்த விஷயத்திற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லை என்பதற்காக எந்த சேவையும் மறுக்கப்படக் கூடாது' என உத்தரவிட்டது குறிப்பிடதக்கது. அப்படி இருந்தும் கூட, பல வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் ஆதாரை கட்டாயம் கேட்பதால், மக்கள் சர்வசாதாரணமாக ஆதார் நகலை கொடுக்கின்றனர்.
இந்நிலையில், ஆதார் அட்டைகளை விநியோகித்து வரும் ‘உதய்’ (UIDAI) நிறுவனத்தின் பெங்களூரு மண்டல அலுவலகம் தரப்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:
- பொதுமக்கள், ஆதார் அட்டையின் புகைப்பட நகலை எந்தவொரு நிறுவனத்துடனும், அமைப்புடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இது ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
- இதற்கு பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும், ‘மறைக்கப்பட்ட ஆதார்’ (மாஸ்க்டு ஆதார்) நகலை பகிரலாம்.
- அது மட்டுமின்றி கம்ப்யூட்டர் சென்டர்களில் இ-ஆதாரை பதிவிறக்கம் செய்ய பொது கணினிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்த்திடுதல் நல்லது. ஒருவேளை அப்படிச் செய்தால், அந்த கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இ-ஆதாரை அழித்துவிட வேண்டும்.
- UIDAI நிறுவனத்திடம் இருந்து பயனர் உரிமத்தைப் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே தகவலுக்காக ஒரு நபரின் ஆதாரைப் பயன்படுத்த முடியும். மற்றப்படி, ஓட்டல்கள் அல்லது தியேட்டர்கள் உள்ளிட்ட உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகல்களை சேகரிக்கவோ, வைத்திருக்கவோ அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது. அவ்வாறு செய்தால் அது ஆதார் சட்டம் 2016ன் கீழ் கருதப்படும் குற்றமாகும்.
- ஒரு தனியார் நிறுவனம் ஆதார் அட்டையை பார்க்க விரும்பினாலோ அல்லது ஆதார் அட்டையின் நகலைப் பெற விரும்பினாலோ UIDAI-யிடம் இருந்து சரியான பயனர் உரிமம் பெற்று உள்ளதா என்பதைச் சரிபார்த்து பகிர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு முடிவெடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், உடனடியாக UIDAI நிறுவன அறிக்கை வாபஸ் பெறப்படுவதாக புதிய விளக்கத்தை வெளியிட்டது. ஒன்றிய அமைச்சகத்தின் அறிக்கையில், ‘ஆதார் நகலை எந்த நிறுவனத்துடனும், அமைப்புடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற அறிக்கை பொதுமக்களுக்கு ஓர் அறிவுறுத்தலாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
இருப்பினும், அது தவறான விளக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால் அது உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது. ஆதாரின் தொழில்நுட்பம், ஆதார் வைத்திருப்பவரின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது,’ என குறிப்பிடப்பட்டது. இவ்வாறு ஒன்றிய அரசு கூறினாலும், இனிமேல் ஆதார் நகலை வழக்கம் போல் தைரியமாக தரலாமா, வேண்டாமா என்ற குழப்பம், பொதுமக்கள் மத்தியில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
எண்ணற்ற நோய்களை சரிசெய்யும் வாழைத்தண்டின் அற்புத பயன்கள்.!
HDFC: சென்னையில் 100 பேரின் வங்கிக் கணக்கில், தலா ரூ.13 கோடி, மக்கள் அதிர்ச்சி!!
Share your comments