ரம்ஜானை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை மே 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து வரும் மே 2ம் தேதி பிறை தெரிந்தபின் மறுநாள் மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்நிலையில் ரம்ஜானை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
காலை 5 மணி முதல் சந்தையில் ஆடு விற்பனை தொடங்கியது. பெங்களூரு, கர்நாடகாவின் கோலார், ஆந்திராவின் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் உள்ள வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 20,000 பேர் திரண்டனர்.
பொதுவாக 10 கிலோ எடையுள்ள கிடா ஆடு ரூ.12,000 ஆக இருக்கும், ஆனால் தற்போது ரம்ஜான் பண்டிகையால் அதே 10 கிலோ கிடா ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், எடைக்கு ஏற்ப ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரை விற்பனை செய்யப்பட்டது. குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரே நாளில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது என்று வியாபாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.
வழக்கத்தை விட தற்போது ஆடு விலை சற்று அதிகமாக உள்ளது. ரூ.800க்கு விற்கப்படும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சியின் விலை உயர்வால் விலை கட்டுப்படி ஆகவில்லை என வெளியூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வாரம் ஆடு விற்பனை அதிகரித்துள்ளதாலும், ரம்ஜான் பண்டிகையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளதாலும் ஆடு விலை உயர்ந்துள்ளதால் ஆடு வளர்ப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி கொண்டாடப்பட உள்ளதால் ஆடு விற்பனை அதிகரித்து உள்ளது.
மேலும் படிக்க:
ஆடு சந்தை திறப்பு : தீபாவளி விற்பனை படுஜோர் - ரூ.12,000க்கு விலை போன ஆடுகள்!
Share your comments