வாடகை ஆட்டோக்களை ஒருங்கிணைக்கும் வகையில், அரசு சார்பில் செயலி உருவாக்கும் பணியில், தமிழக போக்குவரத்து துறை ஈடுபட்டு உள்ளது. தமிழகத்தில் ஆட்டோக்களில் பயணம் செய்வோரிடம், நேரம், துாரத்துக்கு ஏற்ப பலவகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலி வழியாக இயங்கும் ஆட்டோக்களை, வாடிக்கையாளர்கள் தேடிச் செல்கின்றனர்.
வாடகை ஆட்டோ (Auto)
தனியார் நிறுவனங்களும், நெரிசல் நேர கட்டணம், காத்திருப்பு கட்டணம், ரத்து கட்டணம் என, பல வித கட்டணங்களை வசூலிக்கின்றன. இவை ஒரே மாதிரியாக இல்லாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆட்டோக்களை இணைத்த போது குறிப்பிட்ட கமிஷன் தந்த அந்த நிறுவனங்கள், நாளடைவில் கமிஷனை குறைப்பது; நெடுந் தொலைவில் இருந்து சவாரி ஏற்றச் சொல் வது; தொடர்ந்து அதிக சவாரிகளை ஏற்ற நெருக்கடி தருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும், ஓட்டுனர்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசே செயலியை உருவாக்கி, குறைந்த கமிஷன் தொகையுடன், ஒரே மாதிரியான மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்தால், பயணியருக்கும், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கும் லாபகரமாக இருக்கும் என, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இதற்கான செலவுக்கு, ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள தொகையை செலவழிக்கலாம்; தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, குறிப்பிட்ட தொகையை பிடிக்கலாம் என்றும், அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம், 13ம் தேதிக்குள், கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்; ஆட்டோக்களுக்கான அரசு செயலியை உருவாக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களை, நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, போக்குவரத்து துறை கமிஷனரிடமும் அளித்துள்ளனர். கோரிக்கைகளை ஏற்காவிட்டால், அடுத்த மாதம், 13ம் தேதி, மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சவாரி செயலி (Savari App)
இந்நிலையில், கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் உள்ள, 70 ஆட்டோக்களை இணைத்து, கேரள அரசு, 'சவாரி' என்ற செயலியை உருவாக்கியது. இது, பொதுமக்களிடமும், ஆட்டோ ஓட்டுனர்களிடமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆராய, தமிழக அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதிலுள்ள நிறை, குறைகளின் அடிப்படையில், விதிகளையும், செயலியையும் உருவாக்கும் பணியில், கூடுதல் போக்குவரத்து கமிஷனர் மனக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் படிக்க
உலகை அச்சுறுத்தப் போகும் அதிவெப்ப உயர்வு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Share your comments