திருச்சி மாநகராட்சி துவக்கப் பள்ளியை, நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ள தலைமை ஆசிரியைக்கு (Head Master) பாராட்டுகள் குவிகின்றன.
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை அருகே, புத்துார் மாநகராட்சி துவக்கப் பள்ளி உள்ளது. கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருந்ததால், 2019ம் ஆண்டு வரை வெறும் 18 மாணவர்களே, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படித்து வந்தனர். இந்நிலையில், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக அம்சவள்ளி, 50, பொறுப்பேற்றார். மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முற்பட்டபோது, 'ஓட்டை, உடைசலான பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாது' என, பெற்றோர் கூறியுள்ளனர்.
'ஸ்மார்ட் கிளாஸ்'
இதையடுத்து, தன் சொந்த செலவில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஏசி' வசதியுடன் கூடிய 'ஸ்மார்ட் கிளாஸ்' (Smart Class) ஒன்றை உருவாக்கினார். அதை, மும்பையைச் சேர்ந்த 'புளூசிப்' தனியார் நிறுவனத்திடம் காண்பித்து, பள்ளியின் தரத்தை மேம்படுத்த நிதியுதவி கேட்டார். அவர்களும் 20 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர்.
அந்த நிதியில், நவீன 'ஏசி' வகுப்பறை, ஒவ்வொரு மாணவருக்கும் 4,500 ரூபாய் மதிப்பில் தனித்தனி 'சேர்' வசதி, நுாலகம், 'புரொஜக்டர்' வசதியுடன் கூடிய தொடுதிரை வகுப்பறைகள், விளையாட்டு தளம், 'டச் போர்டு' ஆகியவை அமைத்தார். மேலும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'டேப்லெட்' (Tablet) என, வெளிநாட்டு பல்கலை வகுப்பறைகள் போல் மாற்றியுள்ளார்.
இதனால், தற்போது பள்ளியில் 65 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் பலர், சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.தலைமை ஆசிரியை அம்சவள்ளி கூறியதாவது: ஆசிரியை பணியில் 30 ஆண்டுகளாக உள்ளேன். தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளையே மாணவர்கள் விரும்ப வேண்டும் என்பது என் லட்சியம். அதற்காக தான், தனியார் பள்ளிகளை விட, அதிநவீன வசதிகளுடன் இந்த பள்ளியை தயார் செய்துள்ளேன்.
மிகுந்த ஒத்துழைப்பு
உடன் பணியாற்றி வரும் ஆசிரியை தஸ்லீன் பல்கீஸ், மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரும், நானும் எங்கள் சொந்த பணத்தில் ஊதியம் கொடுத்து, இரு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்த காலம் முதல், தனிப்பட்ட முறையில் வகுப்புகள் நடத்தி வருகிறோம். பள்ளி வளாகத்தில் பொது நுாலகம் அமைத்து உள்ளோம். போட்டித் தேர்வு முதல், அனைத்து வகையான பயனுள்ள புத்தகங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். பள்ளிகள் திறக்கும் போது, பொது நுாலகமும் பயன்பாட்டுக்கு வரும்.
தலைமை ஆசிரியை அம்சவள்ளி, ஆசிரியை தஸ்லீன் பல்கீஸ் ஆகியோரை, பெற்றோரும், கல்வி அதிகாரிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு ஆர்கானிக் துணி வகைகள்!
பூட்டிய வீடுகளை கண்காணிக்க மொபைல் ஆப்: கோவையில் அறிமுகம்!
Share your comments