பேக்கிங்க் மற்றும் பிராண்டிங்க் செய்யப்பட்ட தினை மாவு உணவு தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டியை தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று நடைப்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தினை விவசாயிகளும்,தினை மாவில் உணவு பொருள் தயாரிப்பவர்களும் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் படி, எடையின் அடிப்படையில் குறைந்தபட்சம் 70% கலவை கொண்ட தினை மாவினாலான உணவு தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும், பிராண்டிங்க் மற்றும் பேக்கிங்க் செய்யப்பட்ட தினை மாவிலான தயாரிப்புகளுக்கு இனி 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். மேலும் பிராண்டிங்க் இல்லாத தினை மாவிலான உணவு தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி பூஜ்ஜியமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எம்.பி.பூனியா உட்பட இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், 51-வது கவுன்சில் கூட்டத்தின் போது ஒப்புதல் பெற்ற அந்தந்த எஸ்ஜிஎஸ்டி சட்டங்களில் ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரிவிதிப்பு தொடர்பான மாற்றங்களை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார். அவற்றில் மேற்குறிப்பிட்டது போல் தினை மாவில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும், வெல்லப்பாகு மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றார். இந்த நடவடிக்கை கரும்பு விவசாயிகள் பயனடைவதோடு, கால்நடை தீவன விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரி விகிதங்கள், கொள்கை மாற்றங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட ஜிஎஸ்டி தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போது கூடுகிறது. 52-வது கூட்டம் இந்திய வரி முறையை பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பது மற்றும் அதற்கான கூட்டு தீர்வுகளை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மறைமுக வரி கட்டமைப்பை வடிவமைப்பதில் ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுதானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த முடிவால் வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், சிறுதானிய நுகர்வு அதிகரிக்கும் என்பதால் இந்த வரி குறைப்பை ஆதரிக்கிறோம் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் காண்க:
அடுத்த 4 நாட்கள்- இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை எச்சரிக்கை
Share your comments