தமிழகத்தின் சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக மழைப் பெய்யும்.மேலும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில், ஆந்திரா, ஒடிசா இடையே உருவாகியுள்ளதால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இது குறித்து கூறுகையில், “மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது” என்றார்.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் எனவும், தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று மற்றும் நாளையும், தமிழகத்தின் கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில், நாளை வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். தென்மேற்கு, மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில், 15ம் தேதி வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக சின்ன கல்லாரில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது.அவலாஞ்சி, 9; சோலையாறு, 8; வால்பாறை, 7; பந்தலுார், 6; நீலகிரி, 3; கும்மிடிப்பூண்டி, பெரியாறு, பேச்சிப்பாறை, 2; தென்காசி, அம்பை, திருச்சுழி, பாபநாசம், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேலும் படிக்க:
தமிழகத்தில் போட்டுத்தாக்கும் கனமழை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்-நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
Share your comments