தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமிக்கு கெளரவ கர்னல் பதவி வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமையான நேற்று (ஜூன் 27, 2024) நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படைக்கு துணைவேந்தர் ஆற்றிய தொண்டைப் போற்றும் விதமாக இந்த கௌரவ கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த கெளரவ பதவிச் சின்னத்தைப் பெறும் முதல் பெண் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
கௌரவ கர்னல் பதவி:
காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, (துணை இயக்குனர் ஜெனரல்-தேசிய மாணவர் படை மையம் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர்) )இந்த கௌரவ பதவியை துணைவேந்தர் அவர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து அவர் பேசுகையில், ”தான் படிக்ககூடிய புத்தகங்களும், சந்திக்கக்கூடிய மனிதர்களும் தான் ஒருவருடைய வருங்காலத்தைத் தீர்மானிக்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு விழிப்புணர்வு, சமநிலை மனப்பான்மை, துணிவு மற்றும் ஒழுக்கம் ஆகிய நான்கு விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டுமென்றும்” தனது உரையில் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.வெ.கீதாலட்சுமி ஏற்புரை வழங்கினார். தனது உரையில், “இந்தக் கர்னல் பதவி தன்னைப் பெருமைப்படுத்துவதாகவும், சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பதாகவும்” உறுதி கூறினார்.
விழா ஏற்பாடு குழு:
கோவை மண்டல என்.சி.சி குழு காமாண்டர் கர்னல் பி.வி.எஸ்.ராவ் மற்றும் காமண்டிங் ஆபிசர் ஜே.எம்.ஜோசி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்றனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் வரவேற்புரை வழங்க, முனைவர்.நா.மரதைம் (முதன்மையர்-மாணவர் நல மையம்) நன்றியுரை வழங்கினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேளாண்மைப் பல்கலைக்கழகத் தேசிய மாணவர் படை அதிகாரிகள் முனைவர் சு. மனோன்மணி மற்றும் முனைவர். சந்தோஷ் பட்டேல் ஆகியோர் செய்திருந்தனர்.
துணைவேந்தரின் செயல்பாடு:
புகழ்பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14-வது துணைவேந்தர் ஆவார் டாக்டர் கீதாலட்சுமி. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியர், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய இயக்குநர், இயக்குநர் எனப் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
டாக்டர்.வெ.கீதாலட்சுமி TNAU-வில் விவசாயக் கல்வியைப் பெற்று, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களில் வானிலை முன்னறிவிப்பு, காலநிலை மாதிரியாக்கம், காலநிலை மாற்றம் மற்றும் காலநிலையை எதிர்க்கும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகிய துறைகளில் முனைவர் பட்டப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். TNAU-ல் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியவர் வெ.கீதாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?
ஏக்கருக்கு ரூ.730- பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments