பலாப்பழத்தை நீண்ட காலம் சாப்பிடக்கூடிய கறியாக மாற்றி பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர் வேளாண் விஞ்ஞானிகள்.சமீபத்தில் பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற தேசிய தோட்டக்கலை கண்காட்சியில் 18 மாதம் வரை கெட்டுப் போகாமால் இருக்கும் வகையில் பேக்கிங்க் செய்யப்பட்ட பலா கறியினை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
ICAR-Indian Institute of Horticultural Research சார்பில் பெங்களூருவிலுள்ள ஹெசரகட்டாவில் தேசிய தோட்டக்கலை கண்காட்சியானது கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை மூன்று நாள் நிகழ்வாக நடைப்பெற்றது. 22 மாநிலங்களில் இருந்து 70000 பார்வையாளர்கள் (விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட) கலந்துகொண்டனர். இதில் சுமார் 71% விவசாயிகள் கர்நாடகாவிலிருந்தும், 13% விவசாயிகள் தமிழ்நாட்டிலிருந்தும், 6% ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும், தெலுங்கானாவில் இருந்து 5%, மற்ற மாநிலங்களில் இருந்து 16% பேர் பங்கேற்றனர்.
Retort Processing Technology:
பலாப்பழம் கறி பேக்கிங்க் செய்யப்பட்ட நிலையில்- அறை வெப்பநிலையில் 18 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்க Retort Processing Technology முறையினை பயன்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். இந்த முறையானது ரெசிபியினை பதப்படுத்தி பாதுகாக்க சிறந்த வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மற்ற உடனடி சமையல் (ready-to-eat) பொருட்களைப் போலவே, நுகர்வோர் பேக்கிங்கினை பிரித்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை சூடான நீரில் கறியை மூழ்கடித்து, பின்னர் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்கு மாற்றாக பலாக்கறி:
ICAR-IIHR-ன் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் விவசாயப் பொறியியல் பிரிவு முதன்மை விஞ்ஞானி (தோட்டக்கலை) நாராயண சி.கே. இதுக்குறித்து தெரிவிக்கையில், ”பலாப்பழ கறியை தயார் நிலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மாதிரி அறிமுகப்படுத்துவது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுவதோடு அவர்களின் தேவையினை பூர்த்தி செய்யும் என முழுமையாக நம்புகிறோம்.”
”காரணம், கர்நாடகாவில் இருந்து 800 டன்களுக்கு மேல் முதன்மையாக பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்திற்கு பலா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலக அரங்கில் ஒரு இறைச்சி மாற்றாக டெண்டர் பலாப்பழம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதிகரித்து வரும் தேவையை உணர்ந்து, IIHR விஞ்ஞானிகள் தற்போது தயார் நிலையிலான பலாப்பழ கறியினை அறிமுகப்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என கருதப்படுகிறது. மேலும், ஆண்டு முழுவதும் பலாப்பழம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) அங்கீகரிக்கப்பட்ட வகுப்பு I மற்றும் II பாதுகாப்புப் பொருட்கள், ரிடோர்ட் பேக்கேஜிங்க் கூறுகளை கருத்தில் கொண்டு இந்த தயாரிப்பு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Read more:
Share your comments