தக்காளி விலை உயர்வு குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒரு 4,5 நாளைக்கு பொதுமக்கள் யாரும் தக்காளி வாங்காதீர்கள். தக்காளி விலை அதுவே குறைந்துவிடும் என முன்னாள் MLA ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஹெச்.ராஜா இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தக்காளி விலை உயர்வு குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா அளித்த பதில்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. அதற்கு தீர்வு காணாமல் மோடி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாகத் தான் உள்ளது என சமீபத்தில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். அதுக்குறித்து உங்கள் பதில் என்ன? என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு ஹெச்.ராஜா ஆத்திரமடைந்தார்.
அவர் தெரிவிக்கையில், “என்ன பைத்தியக்காரத்தனம் இது. உங்களுக்கு யூரின் பிரச்சினை இருக்கிறது என்றால் கூட மோடி தான் காரணமா?“ என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தக்காளி விலை உயர்வு குறித்து ஹெச்.ராஜா பேசிய விவரங்கள் பின்வருமாறு-
” நானே ஒரு விவசாயி தான். காலையில் மாடுகளிடம் பால் கறந்துவிட்டு தான் இங்கு வந்துள்ளேன். இன்னும் 3 மாதங்களில் தக்காளி பறிப்பதற்கு கூட கூலிக்கொடுக்க இயலாத நிலையில், மாடுகளை மேயவிடுவார்கள். இது நிச்சயம் நடக்கும்.
அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் கணினி வசதி உள்ளது. இணையம் மூலம் தற்போது அனைவரையும் ஒன்றிணைக்கலாம். தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவை தான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலை ஏறுகிறது, இறங்குகிறது. இதற்கு தீர்வு ”IT for Rural"- என்கிற ஐடியாவை நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே கூறினேன்.
அதன்படி உதாரணத்திற்கு 2 லட்சம் ஏக்கர் தான் தக்காளி பயிரிட வேண்டும். அதற்கு மேல் பயிரிடும் எண்ணத்தில் உள்ள விவசாயிகளிடம் தற்போது தக்காளி பயிரிட வேண்டாம் என அலுவலர்கள் கூற வேண்டும்.
வட மாநிலங்கள் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதுப்போன்ற சமயத்தில் தக்காளி விலை ஏறத்தான் செய்யும். நிரந்தர தீர்வுக்கு, குறைந்தப்பட்ச தக்காளி விலை ரூ.40 என நிர்ணயித்தால், அதை விட குறைவாக சந்தைக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து குறைந்தப்பட்ச விலையில் அரசே கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்.
நான் கூட கொய்யா போட்டு இருக்கேன். பழத்தை விற்க வேண்டும் என்றால் 1 நாளில் விற்று ஆகணும். தக்காளி விலையை குறைக்க வேண்டும் என்றால், நீங்களே (consumers) குறைக்கலாம். ஒரு 4,5 நாளைக்கு நீங்கள் யாரும் தக்காளி வாங்காதீர்கள். தக்காளி விலை அதுவே குறைந்துவிடும்” என்றார். இது தான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
மேலும் காண்க:
கரும்பு சாகுபடி, ஆடு, மாடு வளர்ப்பில் கலக்கும் சிறைக்கைதிகள்
Share your comments