இஃப்கோவின் நானோ டிஏபி (திரவம்)தயாரிப்பானது (IFFCO’s nano (liquid) DAP), உர உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இஃப்கோ சதன் தலைமையகத்தில், இஃப்கோ நானோ டிஏபி-யினை (திரவ) வெளியிடும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இஃப்கோ நானோ டிஏபி-யினை அறிமுகப்படுத்திய அமித் ஷா இந்தியாவின் உர உற்பத்தியில் நிகழும் மாற்றங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
“இந்தியாவில் 384 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பு 132 லட்சம் மெட்ரிக் டன் என்றும், அதில் 90 லட்சம் மெட்ரிக் டன்களை இஃப்கோ உற்பத்தி செய்கிறது” என்றார்.
“பயிர் விளைச்சல் மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் IFFCO சமீபத்தில் இரண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நானோ யூரியா (திரவம்) மற்றும் நானோ டிஏபி (திரவம்), இவை இரண்டும் விவசாயிகளின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகளின் அறிமுகமானது IFFCO க்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும் என்றார்” அமைச்சர் அமித்ஷா.
விவசாயத் துறையில் நானோ டிஏபி மற்றும் நானோ யூரியா திரவம் போன்ற புதுமையான தயாரிப்புகள், உர பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயலும். இந்த புதிய உரங்களை அமல்படுத்தியதன் மூலம் யூரியாவின் பயன்பாடு ஏற்கனவே 14 சதவீதம் குறைந்துள்ளது” என்றார். மேலும் “இஃப்கோ நானோ டிஏபி (திரவ) அறிமுகமானது, உரத்துறையில் இந்தியாவிற்கான சுதந்திர தொடக்கத்தைக் குறிக்கிறது” என்று பெருமைப்பட கூறினார்.
"நானோ-யூரியா மற்றும் நானோ-டிஏபி போன்ற நானோ வகைகள் விவசாயத்தில் உர உள்ளீடு செலவைக் குறைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளன" என்று அமித் ஷா குறிப்பிட்டார். யூரியா அல்லாத உரங்களுக்கான வருடாந்திர மானியத்தை குறைக்க நானோ டிஏபி பங்களிக்கும் என்றார்.
விவசாயிகளுக்கு 50 கிலோ எடையுள்ள டிஏபி பையின் விலை அரசின் மானியத்தில் ரூ.1350-க்கு விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள IFFCO -வின் ஒரு பாட்டில் நானோ (திரவ) டிஏபி உரம், வணிக விற்பனைக்கு (500 ml) ரூ.600-க்கு கிடைக்கும். இது தற்போதைய 50 கிலோ பைக்கு இணையானது. வழக்கமான டிஏபி-யுடன் ஒப்பிடுகையில் பாதி விலை என்பதால், விவசாயிகளுக்கு இது பெருமளவில் உதவும் என்றார்.
நானோ டிஏபியின் முதல் உற்பத்தி அலகு குஜராத்தின் கலோலில் அமைக்கப்படும் என்று வெளியீட்டு நிகழ்வின் போது இஃப்கோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
pic courtesy : https://twitter.com/AmitShah
மேலும் காண்க:
WhatsApp செயலில் அட்டகாசமான புதிய அம்சம் - மார்க் கொடுத்த சர்ப்ரைஸ்!
Share your comments