பஞ்சாப் மாநிலத்தின் சில மாவட்டங்களில் கடும் பனி மூட்டத்தால் பார்வைத் திறன் பூஜ்ஜிய மீட்டராகக் குறையும் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் பயணத்தைத் தவிர்க்குமாறு இந்திய வானிலை மையமான (IMD) பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செவ்வாய்கிழமையான இன்று காலை பஞ்சாப், தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி தென்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று, பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
IMD வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு பஞ்சாப் மாநிலம் முழுவதும் மிகவும் அடர்த்தியான மூடுபனி தென்படும். பஞ்சாப்பினைப் போன்று, டெல்லி, ஹரியானா பகுதிகளிலும் பனி தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த தீவிர வானிலை மாற்றமானது வருகிற டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பனியின் தாக்கம் இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, ஹல்வாரா, பதிண்டா மற்றும் ஃபரித்கோட் ஆகிய இடங்களில் மிகவும் அடர்த்தியான மூடுபனி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது நிலவும் மூடுபனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்டியின் மூத்த அதிகாரி ஒருவர் இதுக்குறித்து கூறுகையில், "கடும் மூடுபனியால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படலாம், அதே நேரத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகலாம், ஏன் மூடுபனி காரணமாக சேவை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Read more: 2023 ஆம் ஆண்டின் கடைசி வாரம்- தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மூடுபனியால் பொதுமக்களுக்கு மூச்சிரைப்பு, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அசாதாரண பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அடர்ந்த மூடுபனி நீண்ட நேரம் வெளிப்படுவதால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் தொடர்பான பிற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்" என்று பாட்டியாலா சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும், மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பஞ்சாப்பின் முக்கிய பகுதிகளில் தற்போது நிலவும் வெப்பநிலை நிலவரம்- பதிண்டா 6.4 டிகிரி செல்சியஸ், பதான்கோட் 6.5 டிகிரி செல்சியஸ், மொஹாலி 6.7 டிகிரி செல்சியஸ், ஃபரித்கோட் 7.5 டிகிரி செல்சியஸ், குர்தாஸ்பூர் 7 டிகிரி செல்சியஸ், லூதியானா 7.2 டிகிரி செல்சியஸ், அமிர்தசரஸ் 8.2 டிகிரி செல்சியஸ், பாட்டியாலா 8.6 டிகிரி செல்சியஸ்.
Read more: நள்ளிரவில் அலறியடித்த பொதுமக்கள்- எண்ணூர் உர ஆலையில் கசிந்த அமோனியா
Share your comments