விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் பரிவர்த்தனைக் கூடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழுவில் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை உலர வைக்க உலர்களங்கள், பரிவர்த்தனை செய்ய பரிவர்த்தனை கூடங்கள், ஏல நடவடிக்கை மேற்கொள்ள தேவையான ஏலக்கொட்டகைகள் மற்றும் சிறுதானிய விளைபொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் பரிவர்த்தனைக் கூடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருதுநகரில் 4000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்பு கிட்டங்கிகள், சாத்தூரில் 3600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 4 சேமிப்பு கிட்டங்கிகள், இராஜபாளையத்தில் 6400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கிட்டங்கிகள், மற்றும் அருப்புக்கோட்டையில் 4600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 4 சேமிப்பு கிட்டங்கிகள், மொத்தம் 18600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
விவசாயிகள் சிறுதானிய விளைபொருளை குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 10 பைசா வீதமும், வியாபாரிகள் குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 20 பைசா வீதமும் குறைந்த வாடகையில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து நல்ல விலை ஏற்றம் வரும் பொழுது விற்பனை செய்து பயன் பெறலாம்.
பணத் தேவைக்காக விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்த விளைபொருள்களின் மதிப்பில் 50% முதல் 75% வரை அல்லது ரூ.3.00 இலட்சம் வரை 5% வட்டியுடன் பொருளீட்டுக்கடன் பெற்று பயனடையலாம். முதல் 15 நாட்களுக்கு விவசாயிகளுக்கு வட்டி கிடையாது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் விளைபொருள்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை இருப்பு வைத்து 9% வட்டியுடன் ரூ.2.00 இலட்சம் பொருளீட்டுக்கடன் பெற்று பயன் பெறலாம்.
2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருவதால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து அறுவடை செய்த மக்காச்சோளம்,கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, பணிவரகு, தினை போன்ற சிறு தானியங்களை நன்கு உலர வைத்து சேமித்து வைத்திட மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி பயன்பெறலாம்.
மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் குழுக்கள்/விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய பொருள்களை குறைந்த வாடகையில் இருப்பு வைத்திட விருதுநகரில் 100 மெ.டன், இராஜபாளையத்தில் 25 மெ.டன், அருப்புக்கோட்டையில் 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கிகள் இயங்கி வருகின்றன. இதனை தினசரி வாடகை அல்லது மாதவாடகையில் பயன்படுத்தி பயன்பெறலாம்.
எனவே சிறுதானிய சாகுபடி விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் காண்க:
MSP விலையில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசாணை
Share your comments