தமிழர்களின் முதன்மை பண்டிகையான பொங்கல் திருவிழாவின் தொடர் நிகழ்வாக இன்றைய தினம் காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
கடந்த 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சுமார் 1,000 காளைகள் மற்றும் 600 காளைகளை அடக்கும் வீரர்கள் பங்கேற்றனர். அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய மாடுபிடி வீரருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரத்தினை தொடர்ந்து, நேற்றைய தினம் பாலமேடு பகுதியில் ஜல்லிகட்டு போட்டி வெகு விமர்சையாக நடைப்பெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காகவே, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இருந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக சுமார் 1200 காளைகளும், 700 மாடு பிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
ஜல்லிகட்டு போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி:
அவனியாபுரம் மற்றும் பாலமேடு பகுதியில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைக்க தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைத் தந்திருந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழியினை வாசிக்க, அமைச்சர் உதயநிதி கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தார்.
நடிகர் அருண் விஜய் வருகை:
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியினை காண திரளான பொதுமக்கள் வருகைத் தந்த நிலையில், நடிகர் அருண் விஜய், நடிகர் சூரி, இயக்குனர் விஜய் உட்பட திரையுலக பிரபலங்களும்- இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிப்பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோரின் புகைப்படம் பதித்த ஒரு சவரன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது. பாலமேடு, அவனியாபுரத்தினை போன்று அலங்காநல்லூரில் நடைப்பெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இன்று காணும் பொங்கலையொட்டி சென்னையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மெரினா, பெசண்ட் நகர், உள்ளிட்ட கடற்கரையில் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read also:
IMD 150 வது ஆண்டு: விவசாயிகளுக்காக பஞ்சாயத்து வாரியாக வானிலை நிலவரம்
Jallikattu: அலப்பறையை கூட்டும் வர்ணனையாளர்- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அப்டேட்
Share your comments