1. செய்திகள்

பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள்

Harishanker R P
Harishanker R P
Farm activities being carried out in a cotton field (Pic credit: Pexels)

தொடர் மழையால் குறுவை, சம்பா சாகுபடியில் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பருத்தி, உளுந்து பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தை மற்றும் மாசிபட்டங்களில் 22,142 ஏக்கரில் உளுந்து, 2,140 ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் கானூர், கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி, பழையவளம், அக்கறை ஓடாச்சேரி, சோழங்கநல்லூர், வைப்பூர், அடியக்கமங்கலம், சேமங்கலம் உட்பட மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர்பருத்தி, உளுந்து பயிர்கள், வயலில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மழைநீர் வடிந்துள்ள நிலையில், மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முளைப்பு நிலையில் இழப்பீடு: 

இதுகுறித்து கானூர் பகுதி விவசாயி அழகர்ராஜ் கூறியது: குறுவை, சம்பா சாகுபடிகளில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை, பருத்தி மற்றும் உளுந்து சாகுபடியில் ஈடுகட்டிவிடலாம் என எண்ணியிருந்தோம். ஆனால், அண்மையில் பெய்த தொடர் மழையால் பருத்தி, உளுந்து சாகுபடிக்கு தொடக்கத்திலேயே இடையூறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வேர் அழுகல் ஏற்பட்டு, மறு நடவு செய்ய வேண்டியதாகிவிடும்.

பயிர்க் காப்பீடு திட்டத்தில், முளைப்பு நிலையில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுமானால், 25 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைக் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 25 சதவீத இழப்பீட்டை உடனே பெற்றுத் தர வேண்டும் என்றார்.

மார்ச் 31 வரை பயிர்க் காப்பீடு: 

இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறியது: இப்போது பெய்யும் மழை, தை மற்றும் மாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து மற்றும் பருத்தி செடிகளுக்கு உகந்ததல்ல. இருப்பினும், இதுவரை பெய்த மழையால் எவ்வித பாதிப்பும் இல்லை.

உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களுக்கு இதுவரை 14 ஆயிரம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பருத்திக்கு காப்பீடு செய்ய மார்ச் 31-ம் தேதி கடைசி நாள். எனவே, இதுவரை பருத்திக்கு பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகள், விரைந்து காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்றனர்.

50,000 ஏக்கர் உளுந்து, பச்சைப் பயறு: 

இதேபோல, நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடர் மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உளுந்து, பச்சைப் பயறு வயல்களில் மழைநீர் தேங்கியிருந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை மீண்டும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் 50,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சைப் பயறு செடிகள், மழைநீரில் அழுகி வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read more:

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவு படுத்தப்படும் மரபணு வங்கி

இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டிய குஜாராத் பெண் விவசாயி

English Summary: Incessant rain damages cotton and black gram crops in delta districts of Tamil Nadu Published on: 07 March 2025, 04:14 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.