நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடிபிடிப்பது வழக்கம். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அசுர பலத்தில் தினசரி புதிய அரசியல் பிரச்சினைகள், சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஆனால் இப்போது நாட்டின் பெயரையே மாற்றும் அளவிற்கு புதிய விவாதம் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ஜி20- உச்சி மாநாடு டெல்லியில் நடைப்பெற இருக்கும் வேளையில், ஜனாதிபதி மாளிகையில் இருந்த வெளியான அழைப்பிதழ் விவாதப் பொருளாகி உள்ளது. செப்டம்பர் 9 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் நடைப்பெற உள்ள விருந்தில் பங்கேற்க விடுத்துள்ள அழைப்புக் கடிதத்தில் 'பாரதத்தின் ஜனாதிபதி' (President of Bharat) எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக (President of India) – ‘இந்திய ஜனாதிபதி’ என குறிப்பிட்டு வந்த நிலையில், இது என்ன புதியதாக பாரத் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதற்கு காரணமும் இருக்கிறது. ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A) என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆரம்பம் முதலே பாஜகவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என மாற்ற வேண்டும் என பேசி வரும் நிலையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வருகிற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இதுத்தொடர்பாக புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம் என இப்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ”நமது நாடு 140 கோடி மக்களைக் கொண்டது. இந்திய கூட்டணியின் பெயரை ( I.N.D.I.A) ‘பாரத்’ கூட்டணி என்று மாற்றினால், அவர்கள் (பாஜக) ‘பாரத்’ என்ற பெயரையும் மாற்றுவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் X (டிவிட்டர்) தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். "ஜனாதிபதி மாளிகை அழைப்பு கடிதம் குறித்த தகவல் உண்மை தான். இப்போது, அரசியலமைப்புச் சட்டத்தில் “பாரதம், அது இந்தியா, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என உள்ளது. ஆனால் இப்போது இந்த ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ உள்ளாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், "பாரத்" என்ற வார்த்தையால் எதிர்க்கட்சிகள் கூறப்படும் அசௌகரியம் குறித்து பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறுகையில், “பாரதம் என்று சொல்வதிலும் எழுதுவதிலும் ஏன் சிக்கல் இருக்கிறது? ஜெய்ராம் ரமேஷ் ஏன் வெட்கப்படுகிறார்? நமது தேசம் பழங்காலத்திலிருந்தே பாரதம் என்று அழைக்கப்பட்டு, நமது அரசியலமைப்பில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. காரணமே இல்லாமல் தவறான புரிதலை ஏற்படுத்த முயல்கின்றனர்” என்றார்.
இந்தியா நாட்டின் பெயரை பாரத் என அழைக்க ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் கடுமையாக எதிர்த்தும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் நடைப்பெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அத்தனை சர்ச்சைகளுக்கும் தீனி போடுவது போல் உள்ள நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் காண்க:
Share your comments