ரயில்வே அமைச்சகத்தின் புதிய தொழில்நுட்பம் ரயில்களில் வரவிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இனி ரயில்களில் மிக வேகமாகப் பயணிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தியாவின் 75 நகரங்களை வந்தே பாரத் என்ற அதிவேக ரயிலுடன் இணைக்கும் திட்டத்தினை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகின்றது. தற்பொழுது, நாட்டின் ஐந்து வெவ்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ரயில்களில் இனி நீங்கள் அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க இயலும். வருகின்ற காலங்களில் இன்டர்சிட்டி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க: Pension: மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.18500 ஓய்வூதியம்! புதிய திட்டம்!
இன்னும் சில தினங்களில் வந்தே பாரத் ரயிலின் வேகத்தினை மேலும் அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆகையால், ரயில் திரும்பும் சமயத்தில் ரயிலின் வேகத்தினைக் குறைக்க வேண்டிய அவசியமிருக்காது என்றும், ரயில் ஒரே சீரான வேகத்தில் தண்டவாளத்தை கடக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இயங்கிக் கொண்டிருக்கும் நான்கில் ஒரு பங்கு ரயில்களில் புதிய தொழில்நுட்பத்தினை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக, ரயில் முன்பை விட நீண்ட தூரத்தை கடக்க குறைந்த நேரத்தை மட்டுமே எடுக்கும்.
இனி வரும் காலங்களில் வளைந்த பாதையில் ரயிலை மெதுவாகச் செலுத்த வேண்டிய சிரமம் இருக்காது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் வளைந்த பாதையில் ரயில் திரும்பும் சமயத்தில் ரயிலின் சராசரி வேகம் குறைந்து மொத்த பயணத்துக்கான தூரத்தைக் கடக்க அதிக நேரம் எடுக்குமாம். எனினும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ரயில் அதிவேகமாக திருப்பத்தை கடந்து செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.
தற்பொழுது இருக்கக்கூடிய பாதையிலேயே 'டில்ட் டெக்னாலஜி'யுடன் வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த வசதி வந்த பிறகு, ரயில் வளைந்த பாதைகளில் மிகச் சுலபமாகவும் வேகமாகவும் வளைந்து செல்லுமாம். ரயிலில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு அது சிரமத்தை ஏற்படுத்தாத அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்ட் இருக்கிறது. இந்த 400 ரயில்களில், 100 நீண்ட தூர ரயில்களில் 'டில்ட் டெக்னாலஜி' பயன்படுத்தப்படும். தற்போது இத்தாலி, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயில்கள் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில், நிறைய விபத்துகள் ஏற்படுவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே விபத்துகள் ஏற்பதாக வகையில், பயணிகளுக்குப் பாதுகாப்பாகவும் அதி வேகமாகவும் இயங்கக் கூடிய வகையில் வந்தே பாரத் ரயில்களைத் தரம் உயர்த்தும் பணியில் ரயில்வே அமைச்சகமும் மத்திய அரசும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!
Share your comments