கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த மசாலா பொருட்களில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மசாலா பொருளாக பூண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச சந்தையில் பூண்டுக்கு டிமாண்ட் இருப்பதாலும், சீன பூண்டுகளின் விநியோகம் குறைந்துள்ளதாலும் இந்திய பூண்டு அதிகளவில் ஏற்றுமதியாகியுள்ளது.
பூண்டு ஏற்றுமதி (Garlic Exports)
இந்தியா வழக்கமாக அதிகம் ஏற்றுமதி செய்யக்கூடிய மிளகாய், சீரகம், புதினா பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவின் பூண்டு ஏற்றுமதியோ கடந்த நிதியாண்டில் 165% உயர்ந்துள்ளது என மசாலா பொருட்கள் வாரியத்தின் தகவல் வாயிலாக தெரிகிறது. 2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரையிலான 10 மாதங்களில் இந்தியா 46,980 டன் பூண்டு ஏற்றுமதி செய்துள்ளது. இன்னும் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான பூண்டு ஏற்றுமதி விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் மொத்தமாக கடந்த நிதியாண்டில் இந்தியா 50,000 டன் மேல் பூண்டு ஏற்றுமதி செய்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் சீனா மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளராக இருக்கிறது. ஆனால் சீனாவின் பூண்டு விநியோகம் 20% மேல் குறைந்துவிட்டதால் இந்திய பூண்டுக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து அதிகளவில் இந்திய பூண்டுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளரான சீனாவுக்கு உலகின் மொத்த பூண்டு உற்பத்தியில் 75% பங்கு இருக்கிறது. சீனா சுமார் 25 மில்லியன் டன் பூண்டு உற்பத்தி செய்கிறது. அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா 3.27 மில்லியன் டன் பூண்டு உற்பத்தி செய்கிறது.
இந்தியா, சீனா இரு நாடுகளிலுமே உற்பத்தியாகும் பூண்டு அதிகளவில் உள்நாட்டு மக்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. இதுபோக மீதம்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் பூண்டுகள் அதிகளவில் மலேசியா, நேபாளம், தாய்லாந்து, வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவின் பூண்டுகள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
100 ரூபாயில் ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்: சுற்றுலாப் பயணிகளை கவரும் அருமையான திட்டம்!
இந்தியர்களின் சராசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!
Share your comments