இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும், தமிழ்நாட்டில் இவ்விழா "நவராத்திரி" என்ற பெயரிலும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் "தசரா" என்ற பெயரிலும், மேற்கு வங்கத்திலும் வட இந்தியாவின் பிறப்பகுதிகளிலும் "துர்கா பூஜை" என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
"பூம்புகார்" என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் "கொலு பொம்மைகள் கண்காட்சி" என்ற சிறப்பானதொரு கண்காட்சியினை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டும் சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டுகளைப் போன்றே "கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை" 06 அக்டோபர் 2022 வரை (ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளது.
இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை தர்மேந்திர பிரதாப் யாதவ், அரசு முதன்மை செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, சென்னை மற்றும் ஷோபனா, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், சென்னை அவர்கள் முன்னிலையில் த.மோ. அன்பரசன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் 28 செப்டம்பர் புதன்கிழமை இன்று காலை 9.00 மணியளவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.
இந்த நவராத்திரி கொலு கண்காட்சியில் களிமண், காகிதகூழ், பளிங்குதுள், மரம், கொல்கத்தா களிமண், சுடு களிமண் ஆகிய பொருட்களைக் கொண்டு கடவுள் மற்றும் தெய்வ உருவங்கள், விலங்குகளின் உருவங்கள் மற்றும் திருவிழா தொகுப்பு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு கொலு பொம்மைகள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கண்காட்சியில் இந்த வருடம் புதுவரவாக 6 அடி உயரத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியமான தலையாட்டி பொம்மை இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியில் பலவித கொலு பொம்மைகளுடன் கூடுதலாக, மேலும் பலவிதமான பரிசு பொருட்கள் மற்றும் புதுமையான கலைப்பொருட்கள் சந்தனமரப் பொருட்கள், வெண்மரப் பொருட்கள், நூக்கமரப் பொருட்கள், பித்தளை பொருட்கள், பித்தளை விளக்குகள், பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், ஓவியங்கள் மற்றும் பலவகையான கைவினைப்பொருட்கள், கண்வரும் விதமாக பொதுமக்கள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் அனைத்து வங்கி அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இக்கண்காட்சி 06 அக்டோபர் வரை தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைப்பெற உள்ளது.
இக்கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ.100/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- மதிப்புள்ள கொலு பொம்மைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இக்கண்காட்சி நடக்கும் இடம்,
தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,
பூம்புகார் விற்பனை நிலையம்
108, அண்ணாமலை, சென்னை - 600002
தொலைபேசி எண்: 28520624 / 28589207
மேலும் படிக்க:
PFI-க்கு தடை: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, வன்முறை வெடிக்கும் அபாயம்
Share your comments