கிருஷ்ணகிரியில் மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும் என மா விவசாயிகள் மற்றும் மாங்கூழ் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மா கழிவிலிருந்து பயோ காஸ் தயாரிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
மா ஏற்றுமதி மண்டலம் (Mango Export Zone)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் 4 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மா நுகர்வு, ஊறுகாய் தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்குப்போக, சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் டன் பழங்கள் மாவட்டத்தில் உள்ள 27 மாங்கூழ் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறது. இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் மா விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். மேலும், மாங்கூழ் உற்பத்தியாளர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மா சாகுபடி பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரூ.5 மானியம்
மா விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்ட பழம் மற்றும் காய்கறி பதப்படுத்து வோர் கூட்டமைப்புச் சேர்மேன் தே.உதயகுமார் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரியை மையமாகக் கொண்டு மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். மா மரங்களைத் தாக்கும், ‘த்ரிப்ஸ்’ நோயைக் கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மா விளைச்சல் அதிகரித்து, விலை சரியும் காலங்களில் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் விவசாயிகளுக்கு மானியமாக ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வழங்கி வருகின்றனர். இதே போல, தமிழக அரசும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்
மாங்கூழ் உற்பத்தி செய்யும்போது கிடைக்கும் தோல், நார் உள்ளிட்ட கழிவுகளை வீணாக்காமல், அவற்றைக் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்க வேண்டும். பயோ காஸ் மூலம் பேருந்து, ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை இயக்கலாம். மேலும், இயற்கை உரம், கால்நடை தீவனம், ’பெக்டின்’ உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரிக்கலாம். பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாங்கூழ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மா விவசாயத்தைக் காக்க, தமிழக அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விரிவாகக் கூறியுள்ளோம். எனவே, மா விவசாயத்துக்கான புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாங்கூழ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும்.
மேலும் படிக்க
சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள்: தேசிய விருது வாங்கிய விருதுநகர் விவசாயி!
Share your comments