தென் மேற்கு பருவக் காற்று (South west Monsoon) மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னையைப் பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படும் எனவும் கூறியுள்ளது.
வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டியே இருக்கும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியே பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பஜார், தேவாலா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டரும், சேலம் மாவட்டத்தின் ஓமலூரிலும், கோவை மாவட்டத்தின் சோலையாறிலும் தலா 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில், கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 156.6 மில்லி மீட்டரும், நீலகிரியில் 107.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமாநிலங்களுக்கு எச்சரிக்கை
இதேபோன்று சட்டீஸ்கர், பீகார், மேற்கு வங்கத்தின் இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகள், சிக்கிம், அசாம், மேகாலயா போன்றவற்றில், கனமழை முதல் மிக கனத்த மழைக்கு (Heavy Rain to Very Heavy Rain) வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா,கோவா மற்றும் கர்நாடக கடற்கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் மழை
அதேநேரத்தில், ஜம்மு காஷ்மீர், உத்தர்காண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சட்டீஸ்கர், குஜராத், தெலங்கானா, ஆந்திராவின் ராயலசீமா, கர்நாடகத்தின் கடற்கரையோரப் பகுதிகள்,உத்திரபிரதேசத்தின் மேற்கு மற்றும் ராஜஸ்தானின் கிழக்கு பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் அனல் காற்று
மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் கடும் அனல்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க..
பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்
பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!
சென்னை மக்களுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்
Share your comments