ஆவடி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான கே.பாண்டியராஜன் (K. Pandiyarajan) பருத்திப்பட்டு, ஆவடி மார்க்கெட் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் தொகை ரூ.10 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும் என்றும், 10 இடங்களில் ‘இ-பைக் (E-Bike)', 100 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம். (Water ATM) அமைப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஆவடி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அவர் செய்த நலத்திட்டங்களையும், தற்போது நடைபெறும் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் 100 நாட்களில் செய்ய உள்ள திட்டங்கள் மற்றும் 5 ஆண்டுகளில் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் குறித்தும் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்து கூறி ஆதரவு திரட்டி வருகிறார்.
தீவிர பிரச்சாரம்
ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் மற்றும் செல்வா நகர் பகுதியில் நடைபயிற்சி சென்றவாறு, கே. பாண்டியராஜன் நேற்று காலையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைதொடர்ந்து பருத்திப்பட்டு பகுதியிலும், ஆவடி மார்க்கெட் பகுதியிலும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
வியாபாரிகளுக்கான கடன்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாலுகா நீதிமன்றம் ஆகியவை அமைத்து தருவதோடு, ஆவடி ‘செக்போஸ்ட்' (Checkpost) அருகே புதிய மேம்பால பணிகள் உடனடியாக தொடங்கப்படும். மக்கள் கூடும் இடங்களில் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் நினைவுச் சின்னங்கள் அமைத்து அழகுப்படுத்தப்படும். சாலையோர வியாபாரிகளுக்கான கடன் (Loan) தொகை ரூ.10 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும். ஆவடி தொகுதியில் மாணவர்களுக்கு அறிவியல் பூங்கா (Science park) அமைத்து கல்வி தரம் உயர்த்தப்படும்.
ஆவடி மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 10 இடங்களில் ‘இ-பைக்' வசதி செய்து தரப்படும். ஆவடி மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய ‘மை ஆவடி' அப்ளிகேசன் நவீனப்படுத்தப்பட்டு, சீராக இயங்கிட வழிவகை செய்யப்படும். 100 நாட்களில் ஆவடி மாநகராட்சியில் 32 ஆயிரத்து 703 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். பாதாள சாக்கடை குழிகளில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டு, 49 ஆயிரம் வீடுகளுக்கு கழிவு நீர் இணைப்பு கொடுக்கப்படும்.
ஆவடியில் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு பல்வேறு வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படும். 100 இடங்களில் தனியார் பங்களிப்புடன் தண்ணீர் ஏ.டி.எம். அமைக்கப்படும். இந்த எந்திரத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் பெறலாம்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV Camera) பொருத்தப்படும். ஆவடி நகருக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் பிரமாண்ட நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். கடந்த தேர்தலில் நான் கொடுத்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறேன். அதேபோல இந்த தேர்தலில் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்றுவேன்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தேர்தல் துறை சோதனையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி! வீணாணது நெல் மூட்டைகள்
விவசாயத்திற்கு தனி பட்ஜெட்: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் வெளியீடு
Share your comments