பெண்களுக்கான இலவச பேருந்து பயண சேவை திட்டத்தினால் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறுகிய தொலைவிலான வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கிராம சபைக்கூட்டத்தில் தெரிவித்துள்ள தகவலினால் சர்ச்சை எழுந்துள்ளது.
மே 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபைக்கூட்டம் நடைப்பெற்றது. தென்காசி மாவட்டம் வாடியூரில் நடைப்பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பங்கேற்றார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள், வாடியூர்-தென்காசி இடையே சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த அரசுப்பேருந்து (13-ஆம் நம்பர் பேருந்து) தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். பேருந்து வசதி இல்லாததால் சுமார் 12 பெண்கள் கல்லூரிக்கு சேர்க்க இயலாமல் பீடி சுற்றும் வேலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வேதனை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர், ”தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயண சேவை திட்டத்தினால் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறுகிய தொலைவிலான வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கை குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆட்சியரின் கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையினை கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தினால் எத்தகைய பேருந்து சேவையும் குறைக்கப்படவில்லை என கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மொத்தம் 255 கோடி பயணங்களைச் செய்துள்ளனர்.
சராசரியாக ஒரு நாளைக்கு 45.51 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 7,164 சாதாரண பேருந்துகளில் பயணம் செய்த மொத்தப் பயணிகளில் 65 சதவீத பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநில திட்டக் குழுவின் ஆய்வின்படி, ஒவ்வொரு பெண் பயணிகளும் மாதச் செலவுகளில் ரூ.888 சேமித்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் சாதாரண பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,520 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2023-24-ல் ரூ.2,500 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற இலவச பேருந்து பயணத்திட்டத்தினால் வருவாய் இழப்பு அதிகரித்து 40 ஆண்டுக்கால பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசு தரப்பில் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pic courtesy: https://twitter.com/thinak_
மேலும் காண்க:
அனல் பறந்த NLC நிலம் எடுப்பது தொடர்பான கூட்டம்- விவசாயிகள் எங்கே?
Share your comments