நாட்டில் மின்சார தேவைகளின் பெரும்பகுதியை அனல்மின் நிலையங்களே நிறைவேற்றி வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்கள் தடையில்லாமல் செயல்பட நிலக்கரி அவசியமான ஒன்று. இச்சூழலில் இந்தியா முழுவதும் உள்ள 135 அனல்மின் நிலையங்களில் பாதி நிலையங்கள் நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தியை நிறுத்திவைத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதற்குக் காரணம் உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது தான். சமீப நாட்களாக கடுமையான மழை பெய்து வருவதால் நிலக்கரியை உற்பத்தி செய்யமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலக்கரியை சார்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதே பிரதான காரணமாக கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவால் சில வருடங்களாக நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இதனை ஈடு செய்யும் வகையில் மாற்று எரிசக்தியை முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே அம்மாநில அரசுகள் தினமும் 1 மணி நேர மின்வெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. மேலும் இப்பிரச்சினையை விரைவாக சரிசெய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இந்த மாநிலங்கள் மட்டுமல்லாமல் ஜார்க்கண்ட், பீகார், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களும் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி கடிதமும் எழுதியுள்ளன. இதனிடையே இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங், அனைத்து அனல்மின் நிலையங்களிலும் போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது. நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை, இனியும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அளித்த விளக்கத்தில் சந்தேகம் வரும்படியாக பஞ்சாப் அரசின் தற்போதைய அறிவிப்பு உள்ளது. இனி நாள்தோறும் 2 அல்லது 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு ஏற்படும் என்று அதிகாரப்பூர்வமாக மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதற்குக் காரணமாக இந்தியளவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடே என்பது தெளிவாகியுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments