விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயித்து சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக்கோரி 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் "கிசான் மகாபஞ்சாயத்" என்ற பேரணியில் பங்கேற்றனர்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ளார்கள். கடந்த மாதம், SKM குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) முறையான உத்தரவாதத்திற்கு அழுத்தம் கொடுக்க "கிசான் மகாபஞ்சாயத்" பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தில் ஈடுபட்ட, ஒன்றிய அரசை சட்டம் இயற்றுவதிலிருந்து பின்வாங்க செய்தனர். அப்போது விவசாயிகள் அமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை தற்போது வரை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முரணாக செயல்படும் MSP-க்கான குழுவை கலைக்குமாறு ஒன்றிய அரசிடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்குதல், மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணியை தொடங்கினர்.
விவசாயிகள் கோரிக்கை என்ன?
விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் தேவை. விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிக்காத MSP குழுவை கலைக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கேட்டுக்கொள்கிறது. ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.
மின்சாரத் திருத்த மசோதா 2022-ஐ நீக்க வேண்டியது அவசியம். SKM-உடன் கலந்தாலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மீறியுள்ளது கண்டனத்திற்குரியது என்பதாகும்.
விவசாய பேரணியில் பங்கேற்ற பிகேயு டகவுண்டாவின் பொதுச் செயலாளரும் எஸ்கேஎம் உறுப்பினருமான ஜக்மோகன் சிங் பாட்டியாலா தெரிவிக்கையில் "எங்கள் கோரிக்கை அறிக்கையினை, சுமார் 15 எஸ்கேஎம் தலைவர்கள் குழுவுடன் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து வழங்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இந்த பேரணியால் டெல்லி கேட், அஜ்மேரி கேட், ஜேஎல்என் மார்க், சமன் லால் மார்க், மகாராஜா ரஞ்சீத் சிங் மார்க், மிர்டார்ட் சௌக், மிண்டோ ரோடு ஆர்/எல், ஆர்/ஏ கமலா மார்க்கெட் போன்ற சில வழித்தடங்களில் போக்குவரத்து பாதைகள் டெல்லி காவல்துறையினரால் திருப்பி விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Share your comments