1,போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் திட்டவட்டம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்துள்ள முதல்வருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.
2 ,சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. முகாமானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் எனவும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழில் முனைவோருக்கு அரசின் சார்பில் வழங்கும் உதவிகள் குறித்து விவரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
3,ஒடிசா விவசாய அமைச்சருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!
ஒடிசா விவசாய அமைச்சர் ரணேந்திர பிரதாப் ஸ்வைன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் அமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவை புவனேஷ்வரில் உள்ள க்ருஷி பவனில் சந்தித்தார். நாடு தழுவிய விவசாய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பேசினர்.
2020ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து புது தில்லிக்கு இந்தக் குழு பயணிக்கிறது. மாநில அரசின் ஆதரவைக் கோரி ஸ்வீனுடன் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தியது.
அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உத்தரவாதப்படுத்தும் சட்டம், வணிக வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, ஒப்பந்த விவசாயம் மற்றும் விவசாய சந்தைப்படுத்துதலில் இருந்து பெரிய நிறுவனங்களைத் தடுப்பது, விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்களை வழங்குதல் மற்றும் போராட்டத்திற்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
4, தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் வரும் வாரம் பாதிப்பு!
கொள்முதல் விலை தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் வியாழக்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும்.
தற்போது, ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களை உற்பத்தி செய்யும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, உற்பத்தியாளர்களிடம் இருந்து, லிட்டருக்கு, 32க்கு பால் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 7 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் தற்போது ஆவின் பால் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டு, லிட்டருக்கு 42 முதல் 46 வரை கொடுக்கும் தனியார் பால் பண்ணைகளை நாடியுள்ளனர்.இந்நிலையில், இந்த வாரம் பால் விநியோகத்தில் கடும் இடையூறு ஏற்பட்டுள்ள மதுரை மண்டலத்தில் சனிக்கிழமை அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று சங்கம் அறிவித்துள்ளது. கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் மார்ச் 17 முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.
5,கால்நடை மற்றும் மீன்வளத்தை மேம்படுத்தும் பல நலத்திட்டங்கள் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 189 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவிலான புதிய கட்டங்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் 47.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 61 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 11 கோடியே 66 இலட்சம் செலவில் கட்டுப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந. கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க
ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை- அரசு வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்
நெசவாளர்களின் துயர் துடைக்க வீதிகளில் கைத்தறி ஆடைகளை விற்றவர் அண்ணா- முதல்வர் நெகிழ்ச்சி
Share your comments