1. செய்திகள்

வேலூரில் மினி டைடல் பார்க்- ஓலா நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Mini Tidal Park at Vellore- tamilnadu Govt MoU with Ola

வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கரில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர். இதனைத் தொடர்ந்து ஓலா நிறுவனம்-தமிழக அரசுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.02.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா :

2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை, நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.6.2022 அன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்- அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கான கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

ஓலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் :

ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய் ஆகும். இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற் பூங்காவில் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோரும் முன்னிலை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

உழவன் செயலி மூலம் விதைப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்-வேளாண்துறை

100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்

English Summary: Mini Tidal Park at Vellore- tamilnadu Govt MoU with Ola Published on: 18 February 2023, 04:14 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.