கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை , அம்மாநிலத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தினை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 'ரைத்தசிரி' என்கிற திட்டத்தின் கீழ் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ஹெக்டேருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார். மேலும் சாகுபடி பரப்பை விரிவுபடுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் உற்பத்தியை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தினை உற்பத்தியினை அதிகரிப்பதுடன் தோட்டக்கலை துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலத்திலுள்ள பெரும்பாலான நிலத்தினை இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது. ”முக்யமந்திரி ரைதா உன்னதி யோஜனே” திட்டத்தின் கீழ் கள அளவில் பதப்படுத்துதல், தரப்படுத்துதல் மற்றும் பேக்கிங் செய்வதில் ஈடுபட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் இரண்டாவது பெரிய பட்டுபூச்சி வளர்ப்பு சந்தையான ஷிட்லகட்டாவில் நபார்டு வங்கி உதவியுடன் 75 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப பட்டுபூச்சி வளர்ப்பு சந்தையை உருவாக்க மாநில பட்ஜெட் முன்மொழிகிறது. இதன் மூலம் கோலார், சிக்கபள்ளாப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பட்டு உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிக்பல்லாப்பூரில் ஒரு சர்வதேச ஹைடெக் மலர் சந்தையையும், பெங்களூரு மற்றும் ஹாவேரியில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சில்லறை மலர் சந்தையும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாண கர்நாடகா பகுதியில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல்லாரி மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் செலவில், தினமும், இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மெகா பால் பண்ணை அமைக்க, பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. முன்னதாக, ஹாவேரியில் மெகா பால் பண்ணை அமைப்பதற்கு அரசு 90 கோடி ரூபாய் வழங்கியது.
உருளைக்கிழங்கு விதை சாகுபடியில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில், விவசாயிகளுக்கு நியாயமான விலையில், நுனி வேர் வளர்ப்பு தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு சாகுபடிக்காக வடமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு விதைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 11236 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
விவசாயத்திற்கான இலவச கடன் 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். பெங்களுருவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்காக கூடுதல் கழிப்பிடங்கள் கட்டப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க :
ஓசூர் சிப்காட் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதல்வர்
100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்
Share your comments