கோடை காலம் தொடங்கியவுடன், மின்வெட்டு சாதாரண ஒன்றாகிப் போன நிலையில், மின்சாரம் குறைந்த விலைக்கு கிடைத்தும், டான்ஜெட்கோ நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த டான்ஜெட்கோ நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டு காலங்களில், அதிகமான விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கைத்துறை அலுவலகம் விமர்சனம் செய்துள்ளது.
டான்ஜெட்கோ (TANGEDCO)
டான்ஜெட்கோ எனும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினுடைய நிதி சார்ந்த செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, சிஏஜி எனும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை அளிக்கும் தகவலின் படி, டான்ஜெட்கோ நிறுவனம் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில், அதானி நிறுவனம் டான்ஜெட்கோவுக்கு மின்சாரத்தை விற்றுள்ளது. அப்போது, ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய் 99 காசுகள் என்ற அதிகப்படியான விலையில் டான்ஜெட்கோ வாங்கியதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
இழப்பு (Loss)
இதனைத் தொடர்ந்து, மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை, 3 ரூபாய் 50 காசுக்கு விற்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால், இதனை டான்ஜெட்கோ நிறுவனம் மறுத்துள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த விலையில் ஒரு யூனிட் மின்சாரம் மூன்றரை ரூபாய்க்கு கிடைத்தும் அதனை டான்ஜெட்கோ புறக்கணித்து விட்டது. அதன் பிறகு, ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய் 10 காசுகள் முதல் 5 ரூபாய் 48 காசுகள் வரையில் வேறொரு இடத்தில், அதிக விலைக்கு டான்ஜெட்கோ நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 149 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்ஜெட்கோ நிறுவனம் சில நிறுவனங்களுடன் மின்சாரம் வாங்குவதற்கு ஏற்கனவே, நீண்ட கால ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து, குறுகிய கால ஒப்பந்தம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், அதிகப்படியான விலைக்கு மின்சாரத்தை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டான்ஜெட்கோவுக்கு ரூபாய் 693 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் படிக்க
மின் வெட்டால் ஏற்பட்ட குழப்பம்: மணப்பெண்கள் மாறியது எப்படி?
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மின்னணு முறை: மத்திய அரசின் சிறப்பான முடிவு!
Share your comments