பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டமானது 4,276.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருநகர சென்ளை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் HDPE குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் அமைக்கப்படவுள்ள நீர் கரைந்த காற்று அலகுகள் (Dissolved Air Floatation) மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் (Dual Media Filter) மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) அகற்றிய பின்னர் கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாகப் பெறும் வாகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும். இந்நிலையத்திலிருந்து போரூர் வரை 559 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 இலட்சம் மக்கள் பயன் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா. இ.ஆ.ப.. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், சென்னையிலுள்ள ஐப்பான் தூதரகத்தின் துணை தூதர் தாகா மசாபுகி (Mr.TAGA Masayuki), இந்தியாவிற்கான ஐப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் சைட்டோ மிட்சுனோரி (Mr:SAITO Mitsunori), வி.எ.டெக் வபாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
தஞ்சை உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
நாங்கள் வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்- பறக்கும் வாக்குறுதிகள்
Share your comments